பெய்ஜிங்: உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பல்வேறு வழிகளை மக்கள் கடைபிடித்து வருகின்றனர். அளவான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள், காபி, டீ உள்ளிட்டவற்றை தவிர்த்தல், யோகா பயிற்சி, குழந்தைகள் உடன் நேரத்தை கழித்தல் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன. இருப்பினும், சிலருக்கு எளிதாகவே ரத்த அழுத்தம் அதிகரித்து விடுகிறது. இதுகுறித்து பல்வேறு ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சாலையில் ஏற்படும் ஓயாத இரைச்சல் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கர்ப்பிணிகள் செல்போன் பார்த்தால் சுகர் வருமா? - மருத்துவர்களின் விளக்கம்
Journal of the American College of Cardiology என்னும் இதழில் வெளியிட்டப்பட்ட ஆய்வு முடிவில், ஒரு பரபரப்பான சாலைக்கு அருகில் ஒருவர் இருந்தாலோ அல்லது தினமும் அந்த சாலையில் சென்று வந்தாலோ ஹாரன்கள், சைரன்கள் மற்றும் என்ஜின் உறுமல் காரணமாக எழும் ஒலி மாசு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வை நடத்திய பீக்கிங் பல்கலைக்கழக பொது சுகாதார தொழில் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதார அறிவியல் துறையின் உதவி பேராசிரியர் ஜிங் ஹுவாங் கூறுகையில், UK Biobank தரவுகளை வைத்து சுமார் 2,40,000 பேர்களிடம் உயர் ரத்த அழுத்த ஆய்வு நடத்தப்பட்டது.
இவர்களின் வயது வரம்பு 40 முதல் 69 வரை இருக்கும்படி பார்த்துக் கொண்டோம். இவர்கள் அனைவரது குடியிருப்புகளும் ஏதாவதொரு பரபரப்பான சாலைக்கு அருகில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டோம். இவர்களின் 8.1 ஆண்டுகள் ரத்த பரிசோதனை முடிவுகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தினோம். இந்த பகுப்பாய்வு முடிவுகள் அதிருப்தி தரக்கூடிய வகையில் உள்ளன. இவர்களின் ரத்த அழுத்தம் வாகனங்களின் ஹாரன்கள், சைரன்கள் மற்றும் என்ஜின் உறுமல் சத்தம் காரணமாக ஏற்பட்ட ஒலி மாசுபாடு காலங்களில் அதிகரிப்பதை கண்டறிந்தோம். சொல்லப்போனால், அதிக காற்று மாசுபாட்டிற்கும் ரத்த அழுத்தத்துக்கும் தொடர்புள்ளது.
அதனடிப்படையில் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் ரத்த அழுத்தம் அதிகரிப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ஆனால், இந்த ஆய்வில் காற்று மாசுபாடுடன் ஒலி மாசுபாடும் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக இருப்பதை கண்டறிந்துள்ளோம். ஆகவே, வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும் விளைவுகளை ஏற்படுத்துகிறது எனத் தெரிவித்தார்.
சில டிப்ஸ்: இதுபோன்ற நேரங்களில் ஒலி மாசுபாட்டை தடுக்கும் முறைகளை பின்பற்றலாம். சாலை அருகே உள்ள வீடுகளில் சன்னல் கதவுகளை மூடியே வைக்கலாம். அதேபோல வீட்டில் ஆங்காங்கே இருக்கும் சிறு சிறு துவாரங்களை முறைாக அடைக்க வேண்டும். வாகனவோட்டிகள் தேவைப்படும்போது மட்டுமே ஒலி பெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் போக்குவரத்து துறை உத்தரவிட வேண்டும். அதிக இரைச்சல் கொண்ட வாகன இன்ஜின் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டிலோம் தொலைக்காட்சிகளிலோ அல்லது ஒலி சாதங்களிலோ அதிகப்படியான ஒலி வெளியேறுவதை குறைக்க வேண்டும்.
இதையும் படிங்க: தூக்கத்தைப் பற்றி என்ன சொல்கிறது, ஆயுர்வேதம்?