உடலில் இருக்கும் சர்க்கரை மற்றும் மாவுச்சத்தை சக்தியாக மாற்றும் இன்சுலின் ஹார்மோன் உபயோகத்தை சினைப்பை நோய்க்குறி தடுக்கிறது. இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் எனப்படும் இந்த நிலை ரத்தத்தில் இன்சுலின், சர்க்கரை, குளுக்கோஸை அதிகரிக்கும்.
அதிகப்படியான இன்சுலின் அளவு உடலில் ஆண் ஹார்மோன்கள் என்றழைக்கப்படும் ஆண்ட்ரோஜன்களின் உற்பத்தியை அதிகரிக்கும். இது உடலில் முடி வளர்ச்சி, முகப்பரு, ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் எடை அதிகரிப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.
எடை அதிகரிப்பு ஆண் ஹார்மோன்களால் தூண்டப்படுகின்றது, அதுவும் அடிவயிற்றில் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. அடிவயிற்றில் உண்டாகும் கொழுப்பு உடலுக்கு மிகவும் தீங்கு இழைக்கும். இதன் காரணமாக உடலில் இதய நோய் மற்றும் பிற சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுகின்றன.
தவிர்க்கப்படவேண்டியவை
அதிகப்படியான கார்போஹைட்ரேட் உணவுகள் இன்சுலின் ரெஸிஸ்டன்ஸை ஏற்படுத்தி உடல் எடை குறைப்பை கடினமாக்குகின்றன. வெள்ளை ரொட்டிகள், பாஸ்தா, நூடுல்ஸ், ரவை (சுஜி), பீசா, வெள்ளை அரிசி போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகளில் கார்ப்ஸ் அதிகமாகவும், நார்ச்சத்து குறைவாகவும் இருக்கும்.
சர்க்கரை சேர்க்கப்பட்ட சிற்றுண்டிகள், பானங்கள், பேஸ்ட்ரிகள், இனிப்பு வகைகள், சோடா, குளிர்பானங்கள், சத்து பானங்கள், கேக்குகள், மிட்டாய்கள், குக்கீஸ்கள் போன்றவற்றைத் தவிர்த்தல் வேண்டும்.
உணவு லேபிள்களைப் படிக்கும்போது சர்க்கரையில் சுக்ரோஸ், ப்ரக்டோஸ், கார்ன் சிரப் போன்ற சர்க்கரையின் வேறு பெயர்கள் இருக்கின்றனவா என்று கவனியுங்கள்.
ஆரோக்கியமானதை உண்ணுங்கள்
அதிக நார்ச்சத்துள்ள உணவை உண்ணுங்கள். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றை உண்ணுங்கள். ப்ரோக்கோலி, காலிஃபிளவர், முளை கட்டிய தானியங்கள், பீன்ஸ், பயிறு வகைகள், பாதாம், பெர்ரி, இனிப்பு உருளைக்கிழங்கு, பூசணி போன்ற உயர் நார்ச்சத்துள்ள உணவுகளைத் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு சிறிது சிறிதாக நான்கிலிருந்து ஆறு முறை உணவு உண்ணுங்கள். இது உங்கள் ரத்த அளவை சீராக வைத்திருக்க உதவும். மஞ்சள், தக்காளி, கீரை, பாதாம், வால்நட் உள்ளிட்ட ஆண்டி இன்ஃப்ளமேட்டரி உணவுகளை உண்ணுங்கள்.
ஆரோக்கியமான கொழுப்புகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான கொழுப்புகளில் மீன், வெண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவை அடங்கும்.
அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் ஹார்மோன்களை மறுசீரமைக்கவும், எடையை சீரமைக்கவும் உதவுகின்றன. பச்சை கீரைகள், விதைகள், பருப்பு வகைகள் போன்ற மக்னீசியம் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
நார்சத்து நிறைந்த பழங்களில் வைட்டமின்களும் தாதுக்களும் அதிகமாக இருக்கும். செர்ரி, ப்ளம், ஆப்பிள் போன்ற பழங்களையும் உணவுகளில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
சினைப்பை நோய்குறியை சரிசெய்யும் அளவுக்கு எந்த டயட் முறையும் இல்லை. ஒரு சரியான ஊட்டச்சத்து வல்லுநரைச் சந்தித்து உணவு அட்டையைத் தயார் செய்யுங்கள்.
இதையும் படிங்க: கணவனை கொண்டாட கையில் மெஹந்தி... பெண்களுக்கான எளிய டிசைன்கள்!