லண்டன்: ஐசோமெட்ரிக் உடற்பயிற்சியின் ப்ளாங்ஸ் மற்றும் வால் சிட் (Planks and wall sits ) மேற்கொள்ளும் நபரின் தசைகள், எலும்பு மண்டலங்கள், இருதயம் உள்ளிட்டவை ஆரோக்கியம் பெரும் நிலையில் ரத்த ஓட்டம் சீர் செய்யப்பட்டு உடலில் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் வரும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
உலக அளவில் ரத்த அழுத்த நோய் என்பது மக்கள் மத்தியில் தீ போல் பரவி வருகிறது. சமீபத்திய ஆய்வின் படி சர்வதேச அளவில் சுமார் 113 கோடி பேர் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் அளித்துள்ளது. முன்பெல்லாம் வயதானவர்கள் மத்தியில் மட்டும் காணப்பட்ட ரத்த அழுத்த நோய் இன்றைய சூழலில் இளைஞர்கள், இளம் பெண்கள் எதற்குக் குழந்தைகளைக் கூட விட்டு வைக்கவில்லை என மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பெண்களை விட ஆண்கள் மத்தியில் அதிகம் காணப்படும் இந்த ரத்த அழுத்தம், வாழ்க்கை நடைமுறை, உணவுப் பழக்கம், புகைபிடித்தல், மது அருந்துதல், மன அழுத்தம் மேலும் பிற நோய்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டி பலரும் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுகிறார்கள், சிலர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். ஆனால் நோய்களில் மிகப்பெரும் சிக்கலை ஏற்படுத்தும் ரத்த அழுத்தத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அந்த வகையில் சிகிச்சை, மருந்து மாத்திரைகள் அனைத்தையும் தாண்டி உடற் பயிற்சி மேற்கொண்டால் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைக்க முடியும் எனக்கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். உடற் பயிற்சி என்பது எடை குறைப்பிற்கோ அல்லது வேறு பல காரணங்களுக்கோ மட்டும் அல்ல, ரத்த அழுத்தத்திற்கும் மிக முக்கியமான பங்காற்றும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
1. இருதய ஆரோக்கியத்தில் ஐசோமெட்ரிக் உடற்பயிற்சியின் பங்கு; ஒருவர் அன்றாடம் ஐசோமெட்ரிக் உடற்பயிற்சியை மேற்கொள்ளும்போது அவரின் இருதயத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். இருதயத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் உடலுக்கு போதுமான ஆக்ஸிஜனை வழங்கும். அது மட்டுமின்றி, வாஸ்குலர் அமைப்பின் ஆரோக்கியம், தன்னியக்க நரம்பு மண்டலத்தின் செயல்திறனை ஐசோமெட்ரிக் உடற்பயிற்சி மேம்படுத்துகிறது. இதனால் உடலில் ரத்த அழுத்தம் சீர் செய்யப்படுகிறது.
2. மூட்டுகளின் ஆரோக்கியமும், ஐசோமெட்ரிக் உடற்பயிற்சியும்; மனித உடலில் உள்ள மூட்டுகள் நடப்பது, உட்காருவது, வேலை செய்வது உள்ளிட்ட அனைத்து நேரங்களில் முக்கிய பங்காற்றுகிறது. இந்த மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்கவும், தசை நார் சிதைவைக் கட்டுப்படுத்தவும் ஐசோமெட்ரிக் உடற்பயிற்சி முக்கியமானதாக இருக்கிறது. சில நேரங்களில் வேலைகளின் போது இடுப்பு எலும்பிற்கு திடீரென அழுத்தம் கொடுக்கும்போது அது பலவீனத்தை எதிர்கொள்ளும், ஆனால் ஐசோமெட்ரிக் உடற்பயிற்சி மேற்கொண்டு மூட்டுகளை அழுத்தத்தை எதிர்கொள்ளப் பயிற்றுவிக்கும்போது அதன் இயக்கம் எளிமையானதாக மாறும்.
3. மொத்த உடலையும் வலுவாக வைக்கும் ஐசோமெட்ரிக் உடற்பயிற்சி; உடலை வருத்தி வேலை செய்யும் நபர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரிடம் உடலின் ஒரு பகுதி வலிமையாகவும் மறு பகுதி பலவீனமாகவும் காணப்படுவது வழக்கம். காரணம் அவர்கள் நாள்தோறும் ஒரு கையை பயன்படுத்தி வேலை செய்யலாம், கால்களை மட்டும் பயன்படுத்தி விளையாடலாம். அப்படி இருக்கும்போது தசைகள் மற்றொன்றை விட வலுவாகவோ அல்லது பலவீனமாகவோ இருக்க நேரிடும். இந்த சூழலில் ஐசோமெட்ரிக் உடற்பயிற்சியின் ஸ்பிலிட் குந்து அல்லது சைட் ப்ளாங்கிங் போன்ற உடற்பயிற்சியைச் செய்வதன் மூலம் மொத்த உடலையும் வலுவாக வைக்க முடியும்.
இதையும் படிங்க: தந்தைக்கும் உண்டு தாய்ப்பால் ஊட்டுதலில் பங்கு!: ஆய்வாளர்கள் கூறுவது என்ன?