பிரிட்டன்: பழங்கள், காரமான நொறுக்குத்தீனிகள் உள்ளிட்டவற்றை அடிக்கடி உட்கொள்வதால் மனிதர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக பிரிட்டனின் ஆஸ்டன் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. 428 நபர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கை, பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்டது. பழங்கள் மற்றும் இனிப்பு - காரமான தின்பண்டங்கள் உண்பதற்கும், உளவியல் பிரச்சினைகளுக்கும் உள்ள தொடர்பை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
அதில், ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைவான தின்பண்டங்கள்(ஜங்க் புட்ஸ்) மனிதர்களின் உளவியல் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டது. பழங்கள் சாப்பிடுவதின் அளவை தாண்டி, அடிக்கடி பழங்கள் சாப்பிடுவோரின் மனநிலை ஆரோக்கியமாக இருக்கிறது என்றும், அவர்களுக்கு மனச்சோர்வு உள்ளிட்ட உளவியல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. மறுபுறம் ஜங்க் புட்ஸ் என்றழைக்கப்படும், அதிக இனிப்பு, காரம் மிகுந்த சுவையான நொறுக்குத்தீனிகளை உண்பவர்களுக்கு, பதட்டம், கவலை, விரக்தி போன்ற மன நல பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த ஜங்க் புட்ஸ் அதிகம் சாப்பிடுவோருக்கு, மறதியும் ஏற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அன்றாட வாழ்வில் எரிச்சலுடன் இருப்பது, பொருட்களை எங்கு வைத்தோம் என மறப்பது, அறைக்குள் எதற்காக சென்றோம் என்பதை மறப்பது, வாய்வரை வந்த நண்பர்களின் பெயர்களை நினைவுபடுத்த முடியாமல் இருப்பது போன்ற பிரச்சினைகளுக்கு ஜங்க் புட்ஸ் காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர் நிக்கோலா ஜெய்ன் டக் பேசுகையில், "நம் உணவுமுறை நமது மனநலனை பாதிக்கிறது என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. ஊட்டச்சத்து குறைவான காரமான உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால், மனநல குறைபாடுகள் அதிகரிக்கக்கூடும் என்று எங்கள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது- இதனால் உளவியல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. ஜங்க் புட்ஸ் சாப்பிடுவதை தவிர்த்தால், நம் மன மற்றும் உளவியல் ஆரோக்கியம் மேம்படும். நொறுக்குத்தீனிக்கு பதில் பழங்களை அடிக்கடி உட்கொண்டால் நமது உடல் மற்றும் மன நலனை பாதுகாக்கலாம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:கருக்கலைப்பு, பக்கவாதத்திற்கு காரணமா? - பகீர் கிளப்பும் அதிர்ச்சி ரிப்போர்ட்!