தற்போதைய சூழலில் குழந்தை வளர்ப்பு என்பது சவாலான காரியம். குறிப்பாக பாதுகாப்பு என வரும் பட்சத்தில், அது இன்னும் சவாலாகி விடும். அதே நேரத்தில், குழந்தைகள் மீது அதிகப்படியான பாதுகாப்பு உணர்வை விதைப்பதும் குழந்தைகளுக்கு பாதிப்பை உண்டாக்கும். குழந்தைகளுக்கு தேவைக்கு அதிகமான காரியங்களை செய்வது, அவர்கள் தவறிழைக்கும் போது கண்டிக்காமல் விடுவது போன்றவையும் இதில் அடங்கும்.
இது குறித்து மனநல மருத்துவர் ரேணுகா ஷர்மா கூறுகையில், "அதிகப்படியான பாதுகாப்பு உணர்வோடு நாம் குழந்தைகளின் வாழ்க்கையில் தலையிடுவது அவர்களின் மனநலத்தில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், அதிகப்படியான ஒழுக்கத்தை போதிப்பதும், அதிகப்படியான சுதந்திரம் கொடுப்பதும் குழந்தை வளர்ப்பில் தவறு" எனக் கூறுகிறார். இவை இரண்டுமே குழந்தைகளின் தன்னம்பிக்கை, முடிவெடுக்கும் திறன், சரி தவறு ஆகியவற்றை பகுப்பாயும் திறனைப் பாதிக்கும் என்கிறார்
குழந்தை வளர்ப்பில் அதீத அக்கறை
குழந்தைகள் எவ்வளவு சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், யாருடன் விளையாட வேண்டும், என்ன படிக்க வேண்டும், மற்றவர்களுடன் எவ்வாறு பழக வேண்டும் போன்றவற்றில் பெற்றோரின் கட்டுப்பாடுகள் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகள் தங்களது தேவையை கேட்பதற்கு முன்னரே அதைப் பூர்த்தி செய்ய வேண்டும் எனப் பெற்றோர் நினைப்பதுண்டு.
தங்களது குழந்தைகள் கஷ்டங்களையோ அல்லது தோல்வியையோ சந்திக்க கூடாது என்பது பெற்றோரின் விருப்பம். ஆனால் இதுவே ஒருகட்டத்திற்கு மேல் சென்று பெற்றோர் குழந்தை வளர்ப்பில் அதீத அக்கறை காண்பிக்கும் போது, அது அவர்களின் உடல்நலம் மற்றும் மனநலனை பாதிக்கும்.
குழந்தைகளின் வளர்ச்சியில் பாதிப்பு
குழந்தைகளை தங்கத் தட்டில் வைத்து தாங்குவதைப் போன்ற குழந்தை வளர்ப்பானது, அவர்களின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நிதர்சனம். குழந்தைகளுக்கு எந்த விதமான பிரச்சனையும் ஏற்பட்டுவிடக் கூடாது என அவர்களின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது சரி தான். ஆனால் குழந்தைகள் தங்கள் தவறுகளிலிருந்து தான் பாடம் கற்றுக்கொள்ள முடியும் என்பதை பெற்றோர் புரிந்து கொள்வதே இல்லை.
குழந்தைகள் அவர்களுக்கு பிடித்தமானவற்றை செய்ய பெற்றோர் அவர்களுக்கு உத்வேகமளித்து துணையாக இருக்க வேண்டும். ஏனெனில், சிறு வயது முதலே குழந்தைகள் சார்பு நிலையோடு இருந்தால், அது எதிர்காலத்தில் அவர்களின் முடிவெடுக்கும் திறனை பெரிதும் பாதிக்கும். தோல்விகளை ஏற்றுக்கொள்வதற்கான மனோதிடம் மிகக் குறைவாக மாறிவிடும். எனவே, குழந்தை வளர்ப்பில் அதீத அக்கறையானது அவர்களை சுயமாக சிந்திக்க செய்யாமல் எப்போதும் மற்றவர்களின் துணை தேடச் செய்யும். இது அவர்களின் தன்னம்பிக்கையை பாதிப்பத்துடன் சுயமரியாதையையும் கேள்விக்குறியாக்கும்.
சமநிலையின் அவசியம்
மருத்துவர் ரேணுகா மேலும் விவரிக்கையில், குழந்தைப் பருவத்தில் முழுவதுமாக சார்பு நிலையிலான சூழலில் வளரும் குழந்தைகள் அவர்கள் வளர்ந்த பின்பு, அதிக அளவிலான மன அழுத்தம், பயம் மற்றும் கவலையை சந்திக்க கூடும் என்கிறார். இதனால் தான் குழந்தை வளர்ப்பில் சமநிலையை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
குழந்தைகளுக்கு அதீதமான பாதுகாப்பு உணர்வை கொடுப்பதை விடுத்து, சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் தன்மைக்கு ஏற்றவாறு பழக்கவழக்கங்களை உருவாக்கும் சூழலை கட்டமைக்க வேண்டும். சரி தவறி ஆகியவற்றை அவர்களே சிந்தித்து செயலாற்றும் வகையில் குழந்தை வளர்ப்பு அமைய வேண்டும்.
இதையும் படிங்க: 'வெயிலோடு விளையாடுவோம்' - சூரிய வெளிச்சத்தின் நன்மைகள்