சென்னை: நலமுடன் வாழ, உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டும் போதாது. வாயையும் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். வாயில் கிருமிகளை வைத்துக்கொண்டும், ஆரோக்கியமான உணவுகளை உண்டாலும் அது நன்மை தராது. ஆகையினால் வாய் சுத்தம் என்பது மிக முக்கியம்.
நம்மில் பலர் வாயை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பல் துலக்கியப்பின், மவுத் வாஷ் மூலம் வாயை கொப்பளிப்பர். இது பற்கள் மற்றும் பல் ஈறுகளில் ஏற்படும் பிரச்சினைக்கும், வாய் துர்நாற்றத்திற்கும் உதவிகரமாக இருக்கும். ஆனால் மவுத் வாஷ்களில் இருக்கும் கெமிக்கல் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆகவே இயற்கையான மவுத் வாஷை உபயோகப்படுத்தலாம். எப்படினு பார்க்கலாமா?..
நம் சமைலறையில் உள்ள சில வகையான எண்ணெய்களைக் கொண்டே வாய் கொப்பளிக்கலாம். ஆயில் புல்லிங் செய்வதால் பல நன்மைகள் உள்ளன என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். வாயை சுத்தமாக வைக்காவிடில், வாய்வழி தொற்றுகள், ஈறு பிரச்சினைகள், வாய் துர்நாற்றம் போன்றவை ஏற்படும். இவற்றை தவிர்க்க, சந்தைகளில் கிடைக்கும் மவுத் வாஷை விட, நம் சமயலறையில் இருக்கும் எண்ணெய்கள் சிறப்பாக செயல்படுவதாக ஆய்வு தெரிவிக்கின்றது.
ஆயில் புல்லிங் செய்வதன் நன்மைகள்:
- நமது வாய்களில் நூற்றுக்கணக்கான கிருமிகள், பல்வலி, பல் ஈறுகளில் வலி, வாய் துர்நாற்றம் போன்றவற்றை உண்டாக்கும். ஆயில் புல்லிங் செய்வது, வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கவும் உதவும்.
- இனிப்பு பண்டங்களை அதிகமாக உட்கொள்வது, பற்களுக்கு இடையில் சிக்கிய உணவுப்பொருட்களை அகற்றாமல் இருப்பது போன்றவற்றால் பற்சொத்தை ஏற்படுகின்றது. இவை ஏற்படாமல் தவிர்ப்பதற்கு ஆயில் புல்லிங் செய்யலாம்.
- ஈறுகளில் வீக்கம், இரத்தக் கசிவு உள்ளிட்ட பிரச்சினை இருப்பவர்களும் ஆயில் புல்லிங் செய்து நிவாரணம் பெறலாம். பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறை, பிளேக் போன்றவற்றை நீக்கி, பற்கள் வெண்மை பெற ஆயில் புல்லிங் உதவும்.
- ஆயில் புல்லிங் செய்யும் போது, கொப்பளிக்கும் செயல்முறை தாடை மற்றும் கழுத்து தசைகள் போன்றவற்றிற்கு பயிற்சி போல் இருக்கும்.
ஆயில் புல்லிங் செய்வது எப்படி: ஆயில் புல்லிங் செய்வதற்கு நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், குங்குமப்பூ எண்ணெய் போன்ற் எண்ணெய்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். நீங்கள் தேர்ந்தெடுத்த எண்ணெய்யில் ஒரு ஸ்பூன் எண்ணெய்யை எடுத்து, வாயில் ஊற்றிக் கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் வரை விழுங்காமல் கொப்பளித்து, துப்ப வேண்டும்.
இதையும் படிங்க: பெண்கள் விரும்பும் காட்டன் சேலைகளில் இத்தனை வகையா!.. உங்ககிட்ட இதெல்லாம் இருக்கா?