சென்னை: குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கத் திட்டம் - தேசிய குடற்புழு நீக்க வாரம் மார்ச் 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதிவரை நடைபெற உள்ளது.
விடுபட்ட குழந்தைகளுக்கு மார்ச் 21ஆம் தேதி சிறப்புமுகாம் நடைபெற உள்ளது. 1 முதல் 19 வயதுடைய அனைவருக்கும், 20 முதல் 30 வயதுடைய பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் மார்ச் 14 முதல் 19ஆம் தேதிவரை காலை 9 மணி முதல் 4 மணிவரையில் தரப்படயிருக்கிறது.
மாத்திரை உட்கொள்ளும் அளவு
- 1 முதல் 2 வயதுடைய குழந்தைகளுக்கு அரை (200 மி.கி) மாத்திரை (Albendazole) குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது.
- 2 முதல் 19 வயதுடையவர்களுக்கும், 20-30 வயதுடைய பெண்களுக்கும் முழு மாத்திரை (400 மி.கி) வழங்கப்பட உள்ளது.
எல்லாருக்கும் பாதுகாப்பானது
1-19 வயதுடையவர்கள், 2.39 கோடி பேர் உள்ளனர். 20-30 வயதுடைய 54 லட்சத்து 67ஆயிரத்து 69 பெண்களுக்கும், கரு உருவாகாத மற்றும் பாலூட்டாத பெண்களுக்கும் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.
மேலும், இந்த சிறப்பு முகாமில் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், சுகாதாரப் பயிற்சி மேற்கொள்ளும் துணை செவிலியர்களும் ஈடுபட உள்ளனர்.
குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்ளும் முறை
மாத்திரையை வாயில் போட்டு உமிழ்நீர் சுரக்க அதை சப்பி சாப்பிட வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரை உமிழ்நீருடன் தொண்டை வழியே குடலுக்குள் செல்லும்பொழுது குடலில் ஒட்டியுள்ள குடல் புழுக்கள், பூச்சிகளை அழித்துவிடும்.
இந்த Albendazole(ஆல்பென்டசோல்) மாத்திரையை ஆறு மாதத்திற்கு ஒருமுறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பயன்கள்: குடலில் ஒட்டியுள்ள புழுக்கள் நாம் உண்ணும் உணவின் சத்துக்களை உறிஞ்சிக் கொள்வதால், சரியான சத்து இல்லாமல் ரத்தச்சோகை(Anaemic) ஏற்படுகிறது. இது முக்கியமாக சிறுவர்களுக்கு ஏற்படக்கூடும்.
எனவே, இந்த குடற்புழு மாத்திரையை கொடுக்கப்பட்ட விதிமுறைகளின்படி எடுத்துக்கொண்டால், சத்துக்குறைபாடு, ரத்தச்சோகை இல்லாமல் இருக்கலாம்.
இதையும் படிங்க: 'உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நன்மை பயக்கும் எண்ணெய் எது தெரியுமா?'