ஐந்து நிறுவனங்களால் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (ICRISAT) சார்பில் இது முன்னெடுக்கப்பட்டது. மொத்தம் 900 பேரிடம், 19 விதமாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், திணை உணவு எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைவாக இருக்கும் என தெரியவந்துள்ளது.
வளர்ந்து வரும் உடல் பருமன் மற்றும் குழந்தைகள், இளம்பருவத்தினர், பெரியவர்களின் அதிகப்படியான உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதற்கு திணை உணவுகள் பெரிதும் உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
சத்தான திணை
இரும்பு சத்தின் அளவு, மற்ற தானியங்களை விட, குறிப்பாக, அரிசி, கோதுமை, ராகியை விட, திணையில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. திணை, உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் தானிய வகை. சாகுபடியில், சீனா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் இருக்கின்றன. பழங்காலத்தில், முதலாவதாக பயிரிட்டு, மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை திணை தான்.
தற்போதும், சீனாவின் வட மாநிலங்களில் திணை அதிகம் பயிரிடப்படுகிறது. உடல் வலுப்பெற, நம் முன்னோர் அரிசி, கேழ்வரகு, கம்பு, வரகு, திணை ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொண்டனர். இதனால், அவர்களின் உடலானது தேக்கு மரம் போல் திடமாக இருந்தது. இன்று, இவற்றின் பயன்பாடு குறைந்து, அரிசியையும் தவிடு நீக்கி, பாலீஷ் செய்து சாப்பிடும் நிலைக்கு வந்து விட்டோம்.
பல நோய்களில் இருந்து விடுதலை
உடல் வலுவிழந்து, பல்வேறு நோய்களின் பாதிப்புக்கு ஆளாகி வருகிறோம். கொஞ்சம், கொஞ்சமாக இழந்து வரும் பொருட்களில் ஒன்று திணை. மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேனும், திணைமாவுமே உணவாக இருந்தன. திணையில், உடலுக்கு தேவையான புரதச்சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
இரும்பு சத்தின் அளவு, மற்ற தானியங்களை விட, குறிப்பாக, அரிசி, கோதுமை, ராகியை விட, திணையில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. கால்சியத்தின் அளவும், மற்ற தானியங்களை விட அதிகமாக உள்ளது. இதை, களியாகவும், கஞ்சியாகவும் செய்து சாப்பிடுகின்றனர்.
மாவாக அரைத்து, சூடான பால் சேர்த்து, உடல் தளர்ச்சி அடைந்தவர்களுக்கு கொடுக்கும் வழக்கம், இன்றும் இருந்து வருகிறது. உடலை வலுவாக்கி, சிறுநீர் பெருக்கும் தன்மையும் உண்டு. வாயு நோயையும், கபத்தையும் போக்கவல்லது. பசியை உண்டாக்கும் குணம் கொண்டது. திணையில் கொழுப்புச்சத்து 4.3 விழுக்காடு உள்ளது.
இதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மஞ்சளாகவும், ஒளி ஊடுருவக் கூடியதாகவும் உள்ளது. திணை ஓர் அற்புதமான ஆரோக்கியமான தமிழர்களின் பாரம்பரிய உணவு தானியம். தினந்தோறும் ஒருவேளை உணவை திணையால் செய்து உண்டுவந்தால் பல நோய்களில் இருந்து விடுதலை பெறலாம்.
திணை உணவை ருசிக்கலாம்
சத்தான இட்லி தேடுவோருக்கு நம் தொன்மையான பாலிஃபீனால், பீட்டா கரோட்டின் நிறைந்த சத்தான இட்லி திணை இட்லிதான். ஒரு கிலோ தினை அரிசி , 200 கிராம் உளுந்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதனுடன் 20 கிராம் வெந்தயம் சேர்த்து, உளுந்தை தொலியோடு சேர்த்து அரைக்கவேண்டும்.
வைட்டமின் பி, ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டுகள் செரிந்த பாலிஃபீனால் உளுந்து தோலில் தான் உண்டு. நம் முன்னோர்கள் தோலை நீக்காமல் தான் மாவு அரைத்தனர். அதிலிருந்து வரும் இட்லி மல்லிகைப்பூ போல் இருக்காது. அழுக்கு இட்லியாக தான் இருக்கும் .உண்மையில் இந்தக் கறை இட்லிதான் உடலுக்கு நல்லது.
அரிசியின் அளவிற்கு ஏற்ப அதற்கு பதிலாக கைக்குத்தல் அரிசி, மாப்பிள்ளை சம்பா, சிகப்பரிசி, வெள்ளைச் சோளம், போன்றவற்றை பயன்படுத்தியும் சுவை யான இட்லி தோசை செய்யலாம்.
வரகு ,கம்பு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை வைத்து புளியோதரை, வெஜிடபிள் பிரியாணி முதலியவைகளும் செய்யலாம். அரிசியைவிட பல மடங்கு சத்து கொண்ட இந்த சிறுதானியங்களை அரிசிக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.