லண்டன்: வார இறுதி நாட்களில் காலம் தாழ்த்தி தூங்குவது, வார நாட்களில் சீக்கிரமாக எழுவது உள்ளிட்ட ஒழுங்கற்ற வாழ்வியல் முறையால் உடலில் உள்ள உயிரியல் கடிகாரத்தில் (Biological Clock) மாற்றம் ஏற்பட்டு குடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உருவாவதை ஊக்குவிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உடலில் உள்ள சர்க்காடியன் தாளங்கள் மற்றும் குடல் நுண்ணுயிரிகள் குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வில் பல நம்ப முடியாத அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகி இருக்கிறது. நம் அன்றாட வாழ்கையில் மிகச் சாதாரணமாக நினைக்கும் தூக்க நேரம் தொடர்பான அளவீடுகளில், சிறிய மாற்றம் கூட பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் மிகக் குறைவாக இருக்கிறது எனத் தெரிவிக்கும் ஆய்வாளர்கள், முறையற்ற தூக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்குகின்றனர்.
அந்த வகையில், தூக்கத்தின் நடுப்புள்ளியின் நேரத்தின் 90 நிமிட வித்தியாசம் மற்றும் தூங்கும் நேரத்திற்கும் எழுந்திருக்கும் நேரத்திற்கும் இடையிலான அரைப் புள்ளியில் ஏற்படும் வித்தியாசம் குடல் நுண்ணுயிரியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி, நாளடைவில் பல உடல் நல உபாதைகளுக்குக் காரணம் ஆகும் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் எனக்கூறும் ஆய்வாளர்கள், கூடவே, இதய பிரச்னை, நீரிழிவு நோய் உள்ளிட்டப் பல உடல் உபாதைகளுக்குக் காரணமாக அமையும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். வாழ்க்கை முறையால் ஏற்படும் நோய்களுக்கான முதல் காரணம் தூக்கம் இன்மை, முறையற்ற தூக்கம் உள்ளிட்டவைதான் எனவும் ஆய்வாளர்களின் ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
மேலும், நமது உடலின் குடல் நாளத்தில் பல லட்சம் கோடி பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சை மற்றும் ஆர்க்கியா மற்றும் புரோட்டோசோவா உள்ளிட்ட ஒற்றைச் செல் உயிரினங்கள் இருக்கின்றன. இவை நமது உணவிலிருந்து நார்ச்சத்தை நொதிக்க உதவுதல், வைட்டமின்களை ஒருங்கிணைத்தல், வளர்சிதை மாற்றத்தை ஒருங்கமைத்தல் உள்ளிட்ட பல வேலைகளைச் செய்கின்றன.
இவற்றை மொத்தமாகக் குடல் நுண்ணுயிரி என அழைக்கப்படும் நிலையில் முறையற்ற தூக்கத்தால் ஏற்படும் உயிரியல் கடிகார மாற்றம் காரணமாக இந்த நுண்ணுயிரிகள் பாதிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்துதான் உடலில் பல நோய்களும் உருவாகிறது.
ஷிஃப்ட் மாறி பணி ஆற்றுபவர்கள், இரவு காலம் தாழ்த்தி உறங்கி காலையில் சீக்கிரம் எழுபவர்கள், நாள்தோறும் வேறு வேறு நேரத்தில் உறங்குபவர்கள், உறக்கத்தைத் தவிர்த்து இரவு நேரங்களில் இணையத்தில் நேரத்தைச் செலவிடுபவர்கள் உள்ளிட்டப் பலர் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், இதயப் பிரச்னை, பசியின்மை, நீரிழிவு நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் சூழலில், இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்களின் ஆரோக்கியம் பாதிக்க அடிப்படையான காரணம் வாழ்க்கை முறையும் அதிலும் குறிப்பாக முறையான துக்கம் இன்மையும்தான் எனக் கூறும் ஆய்வாளர்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் ஆரம்பப் புள்ளி தூக்கத்தில் இருப்பதாக அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: Anemia: பெண்கள் மத்தியில் வேகமாக அதிகரிக்கும் இரத்த சோகை.. ஆய்வாளர்கள் கூறும் காரணம் என்ன?