சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்து வரும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பல புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் பாதிக்கப்பட்ட மாணவியின் தோழி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாதிக்கப்பட்ட மாணவி கடந்த திங்கட்கிழமை இரவு 7.45 மணிக்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில், அவரது தோழிக்கு கடந்த சனிக்கிழமையே ஞானசேகரன் பாலியல் தொல்லை அளித்திருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை தெரிவிக்கையில், கடைசியாக பாதிக்கப்பட்ட மாணவி திங்கட்கிழமை இரவு அன்று விடுதியில் அழுது கொண்டே இருந்தபோது, அவரது தோழியும் தானும் இதேபோன்று அங்கு பாதிக்கப்பட்டதாக கூறி புலம்பியுள்ளார். அதன் பிறகு இருவரும் ஆலோசனை மேற்கொண்டு 24 ஆம் தேதி காலையில், திங்கட்கிழமை பாதிக்கப்பட்ட மாணவி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: யார் அந்த சார்..? மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் இருப்பது என்ன?
இதையடுத்து மாணவி விடுதிக்குச் சென்ற பெண் காவலர்கள் இரண்டு மாணவிகளிடமும் விசாரணை நடத்தி புகாரை உறுதி செய்துள்ளனர். மேலும், சனிக்கிழமை பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளிக்க தயக்கம் காட்டி வரும் நிலையில், அவரிடம் இருந்து புகாரைப் பெற்று வழக்கு பதிவு செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், ஞானசேகரனின் தொலைபேசியில் ஆபாச வீடியோக்கள் மட்டும் இல்லாமல், சில மாணவர்களின் அடையாள அட்டைகளும் இருந்துள்ளன. அதைப்பற்றி அவரிடம் கேட்டபோது, தனது பிரியாணி கடையில் ரெகுலர் கஸ்டமர் என கூறியுள்ளார். பின்னர் போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது, மாணவர்கள் தங்கள் காதலியுடன் தனிமையில் இருந்த போது அவர்களை வீடியோ எடுத்து மிரட்டி, பின்னர் அவர்களது ஐடி கார்டுகளை போட்டோ எடுத்து வைத்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே ஞானசேகரன் கடந்த 2014 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் காவலர் போல நடித்து, மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டு மிரட்டி இருக்கிறார். ஆனால் அப்போது அவர் மீது பாலியல் தொடர்பான வழக்கு பதிவு செய்யாமல், வழிப்பறி வழக்கு மட்டுமே பதிவு செய்து கைதாகி இருக்கிறார்.
மேலும், ஞானசேகர் வேறு யாருக்கெல்லாம் இது போன்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் போன்ற விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.