கடந்த வருடம் ஜூலை மாதத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், எபோலா, மஞ்சள் காய்ச்சல், ஏவியன் இன்ஃபுளூயன்ஸா உட்பட பத்து விதமான ஆபத்தான தீநுண்மி தொற்றுகளை எதிர்த்துப் போராட தயார்நிலையில் இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. ஏனெனில் அவை பொதுச் சுகாதாரத்திற்கு கேடு விளைவிப்பவை என்பதால்.
கரோனா வைரஸ் பெருந்தொற்று (pandemic) உலகம் முழுவதும் பொருளாதாரங்களை அழித்து 18 லட்சம் உயிர்களைக் காவுகொண்டு உலகச் சுகாதார அமைப்புகளுக்கு அது மிக ஆபத்தானது என்பதை நிரூபித்திருக்கிறது. 2020ஆம் ஆண்டு உலக சுகாதாரத்தை அழித்துவிட்டது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்த உலக சுகாதார நிறுவனம், வெகு சீக்கிரத்திலேயே உலக அளவு வடிவம் எடுத்த இந்தச் சர்வப்பரவல் அகிலம் முழுவதும் இருக்கும் அனைத்து மருத்துவ, சுகாதார அமைப்புகளின் பலகீனங்களை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது என்று சொல்லியிருக்கிறது. மருத்துவத்தின் பல்வேறு துறைகளில் எடுத்த இருபதாண்டு முயற்சிகளின் பலனாக கனிந்த முன்னேற்றங்களை எல்லாம் இந்த சர்வப்பரவல் நிர்முலமாக்கிவிட்டது என்று உலக சுகாதார நிறுவனம் தனது அச்சத்தைத் தெரிவித்திருக்கிறது.
சர்வப்பரவல் தொற்றை எதிர்த்து போராடுவதற்கான உபகரணங்கள் உருப்பெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், எல்லா தேசங்களும் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரு பத்து அம்ச செயல்திட்டத்தை உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது.
அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்ற நிலை வரும்வரை யாரும் பாதுகாப்பாக இல்லை என்று வலியுறுத்தும் அதே வேளை, ஒட்டுமொத்த உலகத்தின் ஆரோக்கியத்திற்காக ஒவ்வொருவரும் கைகோர்த்து இணைந்து செயல்படவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அழைப்பு விடுத்திருக்கிறது. தடுப்பு மருந்தை வேகமாக உற்பத்தி செய்யும் முகாந்திரமாக அது ’உயிரி வங்கி’ அல்லது ‘பையோ பேங்க்’ என்பதை முன்மொழிந்திருக்கிறது.
நோய்களைக் குணப்படுத்துவதற்கு கட்டுக்கடங்காமல் செலவாகிறது என்பதால் ஏராளமானோர் வறுமையில் தள்ளப்படுகிறார்கள் என்று கவலை தெரிவித்துக்கொண்டிருக்கிறது அந்த நிறுவனம். இந்தியாவில் அவசர மருத்துவத் தேவைகளுக்குச் செய்யும் கனத்த செலவுகளால் சுமார் ஆறுகோடி மக்கள் வறுமைக்குழிக்குள் விழுகிறார்கள்.
கோவிட் மரணங்களுக்கான பத்து காரணங்களில் ஏழு, தொற்று அல்லாத நோய்கள் என்று உலகச் சுகாதார நிறுவனம் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. நோயைத் தடுக்கும் வண்ணம், மனோ ஆரோக்கியம் மற்றும் புகையிலை அபாயம் ஆகிய விசயங்களில் கொள்ள வேண்டிய கவனத்தையும் அந்த நிறுவனம் வலியுறுத்துகிறது. நிஜத்தில் இதுதான் ஆரோக்கிய இந்தியாவிற்கான (ஸ்வஸ்த பாரத்) ஒரு சாலை வரைபடம்.
சுகாதார உரிமையை ஓர் அடிப்படை உரிமையாக அறிவிக்க வேண்டும் என்று 15-வது நிதி ஆணையத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சுகாதாரத் துறையின் உயர்மட்டக் குழு பரிந்துரைத்திருக்கிறது. இது சம்பந்தமான அறிவிப்பை அடுத்த வருடம் 75-வது சுதந்திர தினத்தில் வெளியிட வேண்டும் என்றும் அது கருத்துரைத்திருக்கிறது.
உலக மக்கள்தொகையின் 17 விழுக்காடு இந்தியாவில் இருக்கிறது. ஆயினும், உலகத்தைத் தாக்கும் நோய்களில் 20 விழுக்காடும் இந்தியாவைத்த்தான் தாக்குகின்றது. பற்றாக்குறைகளும், கவனக்குறைவுகளும் நிறைந்த சுகாதாரத் துறையில் இந்தியாவின் நிலை ஓர் அவலச்சித்திரமாக இருக்கிறது. தொண்ணூறு விழுக்காடு நோய்களை ஆரம்பச் சுகாதார மையங்களிலே குணமாக்கி விட முடியும் என்று நீண்ட நாளைக்கு முன்பே உலக வங்கி சொல்லியிருக்கிறது. ஆரம்பச் சுகாதாரத் துறையைப் பிணித்திருக்கும் பற்றாக்குறைகள்தான் தேசத்தில் நிகழும் லட்சக்கணக்கான மரணங்களுக்குக் காரணமாக இருக்கின்றன. மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதிலும், பலி எண்ணிக்கையிலும், தொற்று அல்லாத நோய்கள் தொற்றுநோய்களைத் தாண்டிச் சென்றுவிட்டன.
இந்தியா சர்க்கரை நோயின் தலைநகரம் என்ற ஓர் அபகீர்த்தியைச் சம்பாதித்து வைத்திருக்கிறது. இரத்தக் கொதிப்பிலும் புற்றுநோயிலும் இதய நோய்களிலும் கூட அது பின் தங்கிவிடவில்லை.
2010-ல் புற்றுநோய், சர்க்கரைநோய், இதயக் குழலிய நோய், வாதம் ஆகியவற்றைத் தடுக்கும், கட்டுப்படுத்தும் ஒரு தேசியத் திட்டத்தை தேசிய சுகாதாரப் பணித்திட்டத்தின் கீழ் அரசாங்கம் கொண்டுவந்தது. என்றாலும் அந்தத் திட்டம் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. ஏனென்றால் தொற்று அல்லாத நோய்கள் பீடித்த மக்களைத் தேடிக் கண்டுபிடித்து சோதனைகள் செய்வதற்குப் பதில், சுகாதார மையங்களுக்கு வரும் மக்களிடம் சோதனைகள் நிகழ்த்துவதில் மட்டும் அந்தத் திட்டம் கவனம் செலுத்தியது.
கிடைத்திருக்கும் ஆவணங்கள்படிப் பார்த்தால், தேசத்தில் 27 கோடி மக்கள் தொற்று அல்லாத நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கோவிட்-19-க்குப் பலியானவர்களில் பெரும்பாலோனர் தொற்று அல்லாத நோய் வடிவத்தில் வந்த வேறுசில உடன்உபாதைகளுக்கும் ஆளானதால், முதல் கட்டமாக அந்த மாதிரியான மனிதர்களுக்கு கோவிட் தடுப்பூசியைச் செலுத்த தீர்மானித்திருக்கிறது அரசாங்கம்.
தொற்று அல்லாத நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையைத் தரும் அளவுக்கு சுகாதாரச் சேவைகள் விரிவாக்கப்பட வேண்டும்; ஆவணங்கள் சரியாகக் காக்கப்பட வேண்டும். புகைப்பிடிப்பவர்களுக்கு நிமோனியாவால் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு புகைப்பிடிக்காதவர்களை விட 14 மடங்கு அதிகம் என்பதை மனதில் இருத்திக் கொள்வது நல்லது. இந்நிலையில் புகைப்பிடிப்பதை இன்னும் அனுமதிப்பது பொதுச் சுகாதாரத்தோடு மரண விளையாட்டு விளையாடுவது போலாகும்.
அடிமட்ட நிலையிலிருந்தே சுகாதார கட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்திருக்கிறது. செயல்படுத்துவதற்கு முற்றிலும் தகுதியான பரிந்துரைதான் இது.