சென்னை: சென்னை மயிலாப்பூர் பகுதியில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தையும் பாஜக உறுப்பினர் சேர்க்கை திட்டத்தையும் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் துவங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன் கூறுகையில், “மழை வந்தவுடன் துணை முதலமைச்சர் உடனடியாக ரிப்பன் மாளிகைக்கு சென்று ஆய்வு செய்கிறார். ஆனால் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எதுவும் செய்யவில்லை, மழைநீர் சேகரிப்புக்காக கூட எந்த முன்னச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சருடன் விவாதிக்க தயார் என்று அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நான் அவருடன் விவாதிக்க தயார் என்று கூறுகிறார். அவருக்கு மழைநீர் வடிகால் அமைப்பு பணி, மழைநீர் சேகரிப்பு குறித்து ஒன்றும் தெரியாது.
மழைநீர் வடிகால் அமைக்கும் பணி 85 சதவீதம் கூட நிறைவடையவில்லை. பள்ளிக்கரணை, திருவெற்றியூர் பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் வரைபடத்தில் கூட இடம்பெறவில்லை. எந்த ஒரு அடிப்படை உள்கட்டமைப்பு வசதியும் மேம்படுத்தவில்லை. இன்று வரை சிங்காரச் சென்னை திட்டத்திற்கென ஒன்றும் செய்யவில்லை. மத்திய அரசு திட்டங்களை பெயர் மாற்றி ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வது தான் தமிழக அரசின் வழக்கமாக உள்ளது.
இதையும் படிங்க: உடற்கல்வி ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ! பள்ளி முதல்வரும் கைதானது ஏன்?
உலகநாயகன் கமலஹாசனை பெயரை மாற்ற வேண்டும் என அவரை மிரட்டி மாற்ற வைத்துள்ளார்கள். அவரும் திமுகவில் ஒருவர் போல நடந்து கொள்கிறார். தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சரியாக செயல்படவில்லை. குறிப்பாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. பள்ளி கட்டிடங்கள் சரி இல்லை. உதயநிதி புகழை பாடுவதற்குதான் அமைச்சர்களுக்கு நேரம் உள்ளது. இந்த தேவைகளை பூர்த்தி செய்வது குறித்து எந்த பொறுப்பும் இல்லை.
தூத்துக்குடியில் உடற்கல்வி ஆசிரியர் மாணவிக்கு மது கொடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் பள்ளியில் ஆசிரியர்கள் அனைவரும் பெண்களாகவே இருக்க வேண்டும். குறிப்பாக உடற்கல்வி ஆசிரியர்கள் பெண்களாக இருக்க சட்டம் கொண்டு வரவேண்டும்.
2026 தேர்தலில் ஒத்த கருத்து உடையவர்கள் ஒன்று சேர்வது நல்லது. பாஜக கூட்டணியில் அனைவரும் சேரலாம். திமுக கூட்டணியில் இருந்து சிலர் விலகலாம், 2026 தேர்தல் வரும்போது திமுகவே அவர்களின் கூட்டணி பலமாக இருக்கிறது என்று சொல்ல முடியாது. திமுக, அதிமுக இரண்டுமே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. அரசியல் சூழல் பொறுத்து அனைத்தும் மாறும்.
திமுகவை வீழ்த்த ஒத்த கருத்து உடையவர்கள் ஒன்று சேர்ந்து உறுதியாக இருக்க வேண்டுமே தவிர உதிரியாக இருந்து விடக்கூடாது. அது உதயசூரியனுக்கு வாய்ப்பு கொடுத்துவிடும்” என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.