சாயா மிகவும் கூச்ச சுபாவமுள்ள ஒரு இளம்பெண். அவள் தேர்வுகளின் போது அதிக அழுத்தமாக உணரும்போது, சாப்பிடுவதற்கு ஆசைப்படுகிறாள். இதனால் நாட்கள் செல்ல செல்ல தன்னுடைய இருபதாவது வயதில் உடல் பருமன் உள்ளிட்ட பல மாற்றங்களை காண்கிறாள். இது போன்று பல இளம் வயதினர், இந்த பிரச்னையை சந்திக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு மும்பைச் சேர்ந்த உளவியல் ஆலோசகரும், காபி உரையாடல் நிபுணருமான காஜல் யு. டேவுடன் இது குறித்து ஈடிவி பாரத் கலந்துரையாடியது.
அப்போது பேசிய உளவியல் ஆலோசகர் காஜல், “இந்த பெண்ணுக்கு இங்கே என்ன முக்கியம்?. ‘ஒரு நல்ல உணவு, நல்ல மனநிலையை கொடுக்கும்’ நாம் இந்த சொல்லாடலை அடிக்கடி கேட்டிருப்போம். மனநிலை நம் உணவை கட்டாயம் பாதிக்கும் என்பது நாம் நன்கு அறிந்ததே. நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்போது என்ன உணவை விரும்புகிறீர்கள் என்று நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். சோகமாகவோ, கோபமாகவோ விரக்தியுடனோ நீங்கள் உங்களை உணரும் போது என்ன உணவை உண்ண வேண்டும் என நினைக்கிறீர்கள்? என்று கேட்டால் துரித உணவுகள், ஐஸ்கீரிம் உள்ளிட்டவற்றை நாம் அதிகமாக யோசிக்கிறோம். இதனால் மனநிலைகளை சமாளிக்க நாம் உணவுகளையோ நாடுகிறோம். அப்படி இருக்கும் பட்சத்தில் இதில் அந்த இளம்பெண் சாயா மட்டும் விதிவிலக்கா என்ன?. அதனால்தான் சாயாவும் தன்னுடைய தேர்வு அழுத்தங்களை சமாளிக்க உணவுகளை தேர்தெடுக்கிறாள். இதில் சாயா மட்டுமின்றி அவளை போன்ற இளம் வயதினரும், முதியோரும் மன அழுத்தத்திற்கு உணவுகளை நாடுகின்றனர்.
சரி விஷயத்திற்கு வருவோம், இன்னும் பலர் கோபம், விரக்தி ஏற்படும்போது அவர்கள் உணவைத் தவிர்க்கிறார்கள். ஆனால் சிலர் உணவில்தான் அந்த கோப தாபங்களை தணிக்கின்றனர். உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாமல் போவது, தங்களது சொந்த பிரச்னைகள் அடுக்கடுக்காக குவித்து வைத்து அதையே நினைப்பது, போன்ற பல காரணங்கள் இதற்குப் பின்னால் உள்ளன. சில நேரங்களில் நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது, கூடுதலாக உணவை எடுத்துக் கொள்கிறோம். அது மட்டுமின்றி நம் மனநிலைகள் மாறுபடும்போது, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை சாப்பிடுவதற்கு அதிக ஈடுபாடு எடுக்கிறோம். இதனால் நாம் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படி இருக்கும்பட்சத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்.
- நீங்கள் சாப்பிடுவதைப் பற்றி கவனத்தில் கொள்ளுங்கள்
- கேஜெட்களைத் தவிருங்கள்
- குடும்ப உறுப்பினர்களுடன் குறைந்தபட்சம் ஒரு முறையாவது சேர்ந்து சாப்பிடுங்கள்
- நீங்கள் எப்போது, எந்த நேரத்தில் எந்த உணவை தேர்தெடுக்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்
- உங்களை சோர்வாக ஆக்கக்கூடிய உணர்வுகளை நம்பகமான நபருடன் பகிர முயற்சியுங்கள்
- ஒரு ஆரோக்கியமான உடல்நிலையை மேம்படுத்த ஒரு முயற்சி எடுங்கள்
- உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்
- ஒரு செயலை தவறாக செய்துவிட்டு வருத்தப்படாதீர்கள், புதிதாக ஒன்றை தொடங்க முயற்சீயுங்கள்
- நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் போராட வேண்டியது உங்கள் மன நிம்மதியை கெடுக்கும் செயல்களுடனே தவிர உணவுடன் இல்லை. அதனால், உங்களது உணவுகளை உடலுக்கு ஏற்றவாறு தேர்தெடுத்து சாப்பிடுங்கள்.
இதையும் படிங்க...மகத்துவம் நிறைந்த கோதுமை புல்...!