சென்னை: இன்றைய காலத்தில் புகையிலை போதைக்கு அடிமையானவர்களை விட மொபைல் போனுக்கு அடிமையானவர்களே அதிகம். அதிலும் குறிப்பாக குழந்தைகள் மொபைலை கொடுத்தால் தான் சாப்பிடுவேன், தூங்குவேன் என்று அடம்பிடிப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது. இது ஆரோக்கியமான செயல் இல்லை என்று தெரிந்தும், பெற்றோர்கள் குழந்தைகள் தங்களை தொல்லை செய்யாமல் இருந்தால் மட்டும் போதும் என்று நினைத்து மொபைலை கொடுக்கின்றனர்.
மொபைல் போனுக்கு அடிமையானதைக் கண்டு அதிலிருந்து எப்படி குழந்தைகளை மீட்பது என்று சிலர் புலம்புகின்றனர். மொபைல் போனில் உள்ள கேம், சமூக ஊடகங்களில் உள்ள வீடியோக்கள் போன்றவை குழந்தைகளை மொபைல் போனுக்கு அடிமையாக்குகிறது.
குழந்தைகள் அதிக நேரம் மொபைலை பார்ப்பதால், கண் சோர்வு, தலைவலி, உடல் சுறுசுறுப்பின்மை, கவனக்குறைவு, படிப்பில் பின்தங்கி இருப்பது, சமூகத்தில் யாருடனும் பழகாமல் இருப்பது, உற்சாகம் இல்லாமல் இருப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதிக நேர மொபைல் பயன்பாடு குழந்தைகளின் தனிதிறன்களையும் இழக்க செய்யும். ஆகவே குழந்தைகள் மொபைல் போனுக்கு அடிமையாவதை நிறுத்த வேண்டும்.
- நீங்கள் எப்போதும் என்ன செய்கிறீர்கள் என்பதை உங்கள் குழந்தைகள் கவனிப்பர். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். குழந்தைகள் முன்னிலையில் மொபைல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
- உங்கள் குழந்தைகளை வெளியில் அழைத்து செல்வது, குடும்பத்துடன் சுற்றுலா செல்வது, அவர்களுடன், அவர்களுக்காக நேரம் செலவிடுவது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.
- குழந்தைகளை வெளிப்புற விளையாட்டுகளை விளையாட ஊக்குவிப்பது. அதற்கான வழிகளை ஏற்படுத்து கொடுப்பது போன்றவற்றை செய்ய வேண்டும்.
- உங்கள் குழந்தைகளை இசை, தற்காப்புகலை, நடனம், ஓவியம், நீச்சல் உள்ளிட்ட வகுப்புகளுக்கு அனுப்புவது, உங்கள் காலத்தில் நீங்கள் விளையாடிய விளையாட்டுகளை அவர்களுடன் விளையாடுவது, கைவினை பொருட்களை செய்ய அனுமதித்து, நீங்களும் அவர்களுடன் கைவினைப்பொருட்களை செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
- அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளையும் எடுத்துக்கூற வேண்டும். தொழில்நுட்பங்கள் குறித்தும் அவர்களிடம் பேச வேண்டும்.
- சாப்பிடும் போதும், தூங்கும் போதும் மொபைல் போன் பயன்பாடு இருக்கக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.
- குழந்தைகள் எப்போதுமே மொபைல் பயன்படுத்தக்கூடாது என்று நிர்பந்திக்கக்கூடாது. தினசரி அல்லது விடுமுறை நாட்களில் எவ்வளவு நேரம் மொபைல் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு அட்டவணை உருவாக்கலாம்.
- பெற்றோர்கள் குழந்தைகளிடம் கண்டிப்பாக பேச வேண்டும். குழந்தைகளிடம், அவர்கள் விரும்பும் பரிமாணத்தில் கதை கூறுவது, உங்கள் குழந்தை பருவத்தில் உங்களது செயல்பாடுகள் பற்றி கூறுவது, நீங்கள் சந்தித்த இன்னல்கள் குறித்து கூறுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்.
மேற்கண்டவற்றை பெற்றோர்கள் கடைபிடிப்பதன் மூலம் குழந்தைகள் மொபைல் போனுக்கு அடிமையாவதை கட்டுப்படுத்தலாம்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்பருமனால் புற்றுநோயா?... பெற்றோர்களே உஷார்...