சென்னை: வயதானவர்கள் தான் வாயு தொல்லையால் பாதிக்கப்படுகின்றனர் என்பது மாறி, இப்போது இளம் வயதினரும் வாயு தொல்லையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வாயு தொல்லையால் வயிறு உப்புசமாக இருப்பது மட்டும் இல்லாமல், வயிற்றுப்பிடிப்பு, தசைப் பிடிப்பு, வயிறு வீக்கம், மூட்டுவலி, நெஞ்சுவலி, இடுப்பு வலி, நெஞ்செரிச்சல் போன்ற பல பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. முதலில் எதனால் இந்த வாயு பிரச்சினை ஏற்படுகிறது என்று பார்க்கலாம்.
எதனால் வாயுத்தொல்லை ஏற்படுகிறது: நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதால் வாயு தொல்லை ஏற்படும். குறிப்பாக காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு இந்த பிரச்சினை அதிகம் ஏற்படும். நேரம் தவறி சாப்பிடுவதாலும் வாயு தொல்லை ஏற்படும். 8 மணிக்கு சாப்பிட வேண்டிய காலை உணவை நேரம் தவறி 10 மணிக்கு சாப்பிடுவது, மதிய உணவை 3 மணிக்கு சாப்பிடுவது போன்ற செயல்பாட்டால் வாயு தொல்லை ஏற்படும். செரிமான பிரச்சினை உள்ளவர்களுக்கும், புரதச்சத்துமிக்க உணவை அதிகமாக உட்கொள்பவர்களுக்கும் வாயு பிரச்சினை அதிகமாக ஏற்படும்.
தற்போது தீபாவளி பண்டிகை வருவதைத் தொடர்ந்து வீடுகளிலும், கடைகளிலும் பலகாரங்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அளவுக்கு அதிகமாக பலகாரங்களை உண்ணும் போது அவை, செரிமானம் ஆகாமல் அஜீரண கோளாறை ஏற்படுத்தும். இவ்வேளைகளில் வாயு தொல்லையை உடனே சரி செய்ய கடைகளில் கிடைக்கும் சோடாவை வாங்கி குடிக்கின்றனர். இது குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே நிவாரணம் அளிக்கும். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏதேனும் உள்ளதா என்று பலரும் கேட்கின்றனர். கண்டிப்பாக உள்ளது. இந்த பிரச்சினைக்கு பாட்டி வைத்தியம் மூலமாகவே நிரந்தர தீர்வு காணலாம்.
வாயுத் தொல்லைக்கு பாட்டி வைத்தியம்: 2 டம்ளர் அளவு பாலை காய்ச்சி அதனுடன், 10 பல் பூண்டு, சிறிது பெருங்காயம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பால் நன்றாக கொதித்தவுடன் 2 டம்ளர் பால் 1 டம்ளர் பாலாக வற்றி விடும். அதன் பின் இந்த பாலை ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் இதனை குடிக்க வேண்டும். ஒரு மணி நேர இடைவெளிக்குப் பின்னர் 2 டம்ளர் தண்ணீரில் சிறிது சிரகத்தை சேர்த்து கொதிக்க வைத்து, ஆற வைத்து குடித்தால் வாயுத்தொல்லை, வாயுத்தொல்லையால் ஏற்படும் நெஞ்செரிச்சல், தசைப் பிடிப்பு, வயிறு வீக்கம், மூட்டுவலி, நெஞ்சுவலி போன்றவை உடனே சரியாகி விடும்.
இதையும் படிங்க: மாதவிடாய் வலியா.. இத ட்ரை பண்ணி பாருங்க.. வலி போயே போய்டும்!