சென்னை: திரைப்படங்கள் சமூகத்தை பிரதிபலிக்கிறதா அல்லது சமூகம் திரைப்படங்களை பிரதீபலிக்கிறதா என்பது ஒரு குழப்பமான கேள்வியாகவே மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் குழந்தை வளர்ப்பு குறித்தான பல படங்கள் நெகட்டிவாகவும் சில படங்கள் பாசிடிவாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது.
எம் மகன் (எம்டன்), டான் போன்ற படங்களில் பெற்றோர் எனும் கதாபாத்திரம் எப்போதும் கண்டிப்பை காட்டும் நபர்களாகவே சித்தரிக்கப்படுகின்றன. இது போல நாமும் பிள்ளைகளிடம் கண்டிப்பை காட்டினால் தான் அவர்கள் ஒழுக்கத்துடன் வளர்வார்கள் என நம்பி பல பெற்றோர் குழந்தைகளிடம் மிகுந்த கண்டிப்புடன் நடந்து கொள்கின்றனர். இது குழந்தைகள் மத்தியில் பெற்றோர் மீதான அவ நம்பிக்கையை ஏற்படுத்துவதோடு இருவருக்கும் இடையே அதிக இடைவெளியை உருவாக்குகிறது.
குழந்தைகளின் நம்பிக்கையை பெறுவதால் உள்ள பயன்கள்:
குழந்தைகள் பெற்றோர் மீது வைக்கும் நம்பிக்கை என்பது ஒரு சிறந்த முதலீடு. குழந்தைகள் சிறுவயதிலிருந்தே பெற்றோர் மீது அதிக நம்பிக்கை வைத்தால் தான் அவர்களது கருத்துகளை பெரியவர்களுடன் பகிர்ந்து கொள்வர். இதன் மூலம் பெற்றோர் அவர்களது சிந்தனைத் திறனை தெறிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் நல்லது கெட்டதை பிரித்துப் பார்க்க கற்றுக்கொடுக்க முடியும்.
இது அவர்களை பிற்காலத்தில் வரும் எந்த ஒரு பிரச்னைகளையும் தன்னம்பிக்கையுடன் தனியாக சமாளிக்க, மற்றும் தீர்வு காண உதவியாக இருக்கும். விவரம் தெரிந்ததில் இருந்து நம் தாத்தா பாட்டி, அம்மா அப்பா, உறவினர்களது கண்டிப்பான குழந்தை வளர்ப்பை மட்டுமே பார்த்து வளர்ந்த இந்த தலைமுறை இளம் பெற்றோர்களுக்கு இது புதிதாக தெரியலாம். ஆனால் அது அவ்வளவு கடினமல்ல.
பெற்றோர் - குழந்தை இடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள்:
- குழந்தைகள் கண்ணாடியைப் போன்றவர்கள்: குழந்தைகளுக்கு முதல் ரோல்மாடல் பெற்றோர் தான். பெற்றோர் பேசுவதையும், செயல்படுவதையும் கவனித்தே அவர்களும் வளர்கின்றனர். அதனால் சிறு வயதில் இருந்தே நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் நாமும் அந்த பழக்கங்களை பின்பற்ற வேண்டும்.
- நட்பாக பழக வேண்டும்: குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்படும்போது பொதுவாக குடும்பத்தினரிடமோ, சகோதரர்களிடமோ சொல்வதற்கு முன் நண்பர்களிடம் தான் முதலில் பகிர்ந்து கொள்வர். எந்த சூழலிலும் நண்பர்கள் தங்களை குறைத்து மதிப்பிட மாட்டார்கள் எனும் நம்பிக்கையே இதற்கு காரணம். அதனால் பெற்றோர் நட்பாக பழகுவதன் மூலம் அவர்களது நம்பிக்கையை பெற முடியும்.
- கவனமாகக் கேளுங்கள்: குழந்தைகள் உங்களிடம் ஏதாவது பேச வரும்போது கோபப்படாமல் அன்புடன் அணுகுங்கள். அவர்களின் கண்களை நேராகப் பார்த்து, அவர்கள் சொல்வதை முழு கவனத்துடன் கேளுங்கள். அவர்கள் சொல்வதன் அடிப்படையில் சிறிய கேள்விகளைக் கேட்டு அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் கேட்கிறீர்கள் என்பதை குழந்தைகள் புரிந்துகொள்ளவும், உங்களுடன் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இது உதவும். இதைச் செய்வதன் மூலம், சிறு வயதிலேயே குழந்தைகள் உங்களின் நம்பிக்கையை பெற வழிவகுப்பதோடு குழந்தைகளின் மன அழுத்தத்தைத் தவிர்க்க இது சிறந்த வழியாக அமையும்.
- நேர்மையாக இருங்கள்: குழந்தைகளின் தற்காலிக சந்தோஷத்திற்காக அவர்களிடம் பொய் சொல்லி வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்த்து விடுங்கள். அவர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் தெரியாவிட்டால் தெரியாது என்று சொல்லுங்கள். தற்காலிகமாக பொய் சொல்லி அவர்களை மகிழ்வித்தாலும், அவர்கள் உண்மையை அறிந்த நாளில் அவர்களை நம்ப வைக்க முடியாது.
- எல்லைகளை மதிக்கவும்: வீட்டில் உள்ள அம்மா அப்பா என ஒவ்வொரு தனி நபரும் வீட்டின் தனிப்பட்ட அம்சங்களை மதிக்க வேண்டும். வீட்டில் கணவன்-மனைவி என இருவரும் அவரவர் எல்லைகளை மதிப்பதன் மூலம் குழந்தைகளும் அதனை பின்பற்றுவர். இதன் மூலம் அவர்களது நம்பிக்கையை பெறமுடியும்.
- அவர்களது சொந்த முடிவிகளை மதிக்க வேண்டும்: அவர்கள் விரும்பும் உடைகள் மற்றும் பொம்மைகளை வாங்கவும் அவர்கள் தேர்ந்தெடுக்க உதவுங்கள். சிறு வயதிலேயே முடிவெடுக்கக் கற்றுக் கொடுத்தால் அவர்களது எதிர்காலத்துக்கு உதவியாக இருக்கும். அவர்களது சொந்த முடிவுகளை மதிப்பதன் மூலம் அவர்களது நம்பிக்கையை பெற முடியும்.
- தவறு செய்யும் போது பொறுமையாக எடுத்துக் கூறுங்கள்: குழந்தைகளது வெற்றியில் உரிமை கொண்டாடும் நீங்கள் அவர்கள் தோல்வியிலும் சேர்ந்து பங்கெடுங்கள். உங்கள் குழந்தைகள் ஏதேனும் நல்ல செயல்கள் செய்யும் போதும் பாராட்டி பெருமை கொள்வது போல அவர்கள் தவறு செய்யும் போதும் பொறுமையாக அமர்ந்து எடுத்து கூறுவது அவர்கள் உங்கள் மீது வைக்கும் நம்பிக்கையை பல மடங்கு அதிகப்படுத்தும். இது நீங்கள் அவர்களின் பக்கம் இருக்கிறீர்கள் என்று பிள்ளைகள் உறுதியாக நம்ப வைக்கிறது.
இவற்றை பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளது நம்பிக்கையை எளிதில் பெற முடியும். பிள்ளைகள் தங்கள் பெற்றோரை நம்பினால், அவர்கள் தங்கள் ஆசைகள், கனவுகள் மற்றும் சந்தேகங்கள் என அனைத்தையும் முதலில் பெற்றோரிடம் சொல்லி நல்ல விஷயங்களை பெற்றோரிடமிருந்தே கேட்டு கற்றுக் கொள்வார்கள். இது உங்கள் குழந்தையின் மனநிலையைப் புரிந்துகொள்ள உதவும்.
இதையும் படிங்க: உலகை அச்சுறுத்திய போலியோ.. தடுப்பு மருந்தால் அழித்தொழிக்கப்பட்ட வரலாறு..!