சென்னை: நமது புற அழகை தீர்மானிப்பது முகம் மட்டுமில்லை, பற்களும் தான். நம் முகத்திற்கு அழகு சேர்க்கும் சிரிப்பு, பிறருக்கு முக சுளிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது. பற்களை என்னதான் சுத்தமாக வைத்திருந்தாலும், நாம் உண்ணும் உணவுகள் பற்களை மஞ்சள் நிறமாக மாற்றி விடும். பற்களில் கறை ஏற்படுவதற்கு என்னென்ன காரணங்கள் உள்ளன என்பதையும், பற்களில் கறை படியாமல் இருப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
பற்களில் கறை ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?: பற்கள் மஞ்சள் நிறமாக இருப்பதற்கு முக்கிய காரணம், சரியாக பல் துலக்காமல் இருப்பது. சரியாக பல் துலக்காமல் இருக்கும் பட்சத்தில், உணவுத் துகள்கள் பற்களில் படிந்து கறையை ஏற்படுத்தும். பற்கள் சீராக இல்லாமல் இருப்பதும் கறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதாவது பற்கள் சீராக இல்லாமல் இடையே உள்ள இடைவெளியோடு இருக்கும் பட்சத்தில், பல் துலக்கினாலும் தூத் பிரஷ் சரியாக சுத்தம் செய்யாது. இதன் காரணமாக பற்களில் பிளேக் உருவாகி மஞ்சள் கறை ஏற்படும்.
உணவுகளாலும் கறை ஏற்படும்: சில உணவு வகைகளும் பற்களில் கறையை ஏற்படுத்தும் என பல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். புகையிலை போன்றவற்றை பயன்படுத்துவதும் பற்களில் கறைகளை ஏற்படுத்தும். மேலும் அடிக்கடி டீ, காபி, கோக், ரெட் ஒயின் போன்றவற்றை குடிப்பதாலும் பற்களில் விடாபிடியான கறைகள் ஏற்படுகின்றது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது மட்டுமில்லாமல் அதிகளவு புளோரைடு (Fluoride) உள்ள தண்ணீரை குடிப்பதாலும் பற்களில் கறை ஏற்படும்.
பற்களில் கறை ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?: கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். உணவுக்குப் பின் அதிக நார்ச்சத்து உள்ள பழங்களான, ஆப்பிள், கொய்யா போன்றவற்றை உண்ணலாம். உணவு உண்ட பின் நீர் கொண்டு வாயை கொப்பளிக்க வேண்டும். இவற்றை தொடர்ந்து செய்து வர பற்களில் பிளேக் உருவாவதை தடுக்கலாம்.
குழந்தைகளும் துலக்க வேண்டும்: தற்போது உள்ள 90 சதவீத குழந்தைகள் பல் துலக்க விரும்புவதில்லை. பல் துலக்க கூறினால்ம் பேஸ்டை தின்று விட்டு, பிரஷ் பண்ணி விட்டேன் என்று ஓடி விடுகின்றனர். பெற்றோர்களும் அதை சரியாக கண்டுகொள்வதில்லை. பல் துலக்காமல் உணவு உண்பதால் குழந்தைப் பருவத்திலேயே பல் சொத்தை, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பெற்றோர்கள், குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே பல் துலக்க கற்றுக்கொடுக்க வேண்டும். பல் துலக்காமல் இருப்பதால் ஏற்படும் பாதிப்புகளையும் எடுத்துக் கூற வேண்டும். மேலும் இது தொடர்பான வீடியோக்களையும் காட்ட வேண்டும்.
குறிப்பு: அதிகப்படியான மஞ்சள் கறை, பற்கூச்சம் போன்றவை இருப்பின் பல் மருத்துவரை அணுகுவது நல்லது.
இதையும் படிங்க: இத மட்டும் பண்ணா போதும்... உங்க ஃபிரிட்ஜ்ஜை அடிக்கடி க்ளீன் பண்ண தேவையே இல்லை!