சென்னை: தற்போது மொபைல் போன்களை ஹேக் செய்வது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த நிலையில் உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதா?, அதை எப்படி சரி செய்வது என்று முந்தைய பதிவில் பார்த்தோம். இது தொடர்பான தகவல்களை இந்த லிங்கில் சென்று பார்க்கவும்: உங்க மொபைல் ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா?... எப்படி தெரிந்து கொள்வது!இப்போது உங்களது மொபைல் எவ்வாறு ஹேக் செய்யப்படுகிறது? என்றும், இதை தவிர்க்க என்னென்ன செய்ய வேண்டும் என்றும் பார்க்கலாம்.
மொபைல் போன்களை ஹேக் செய்யும் நபர்கள், ஃபோனை ஹேக் செய்வதற்கு ஃபிஷிங் தாக்குதல் (Phishing Attacks), ஸ்மிஷிங் தாக்குதல் (Smishing Attack), பாதுகாப்பற்ற வைஃபை (Insecure WiFi), ஸ்பை வேர் (Spyware) போன்ற பல்வேறு முறைகளை பயன்படுத்துகின்றனர்.
ஃபிஷிங் தாக்குதல்: இந்த வகை தாக்குதலில் ஹேக்கர்கள், மின்னஞ்சல் (Email) மூலம், கிரெடிட் கார்ட் மற்றும் உள்நுழைவுத் தகவல்கள் (Login id) போன்ற முக்கியமான தரவுகளை திருடி ஹேக் செய்கின்றனர்.
ஸ்மிஷிங் தாக்குதல்: இந்த வகை தாக்குதலில் ஹேக்கர்கள், ஹேக் செய்யப்போகும் மொபைலுக்கு குறுஞ்செய்திகளை (SMS) அனுப்புகின்றனர். அதன் மூலம் வங்கிக் கணக்கு பற்றிய தகவல்களை பகிர்வது, தீங்கு விளைவிக்கும் மென்பொருள் அதாவது மால்வேர் போன்றவற்றை பதிவிறக்குவது போன்ற செயல்களை மேற்கொள்கின்றனர்.
ஸ்பைவேர்: விளம்பரங்களை (Pop - ups) மொபைலுக்கு அனுப்பி, நீங்கள் பார்வையிடும் இணையதளங்களை கண்காணிப்பர்.
பாதுகாப்பற்ற வைஃபை: பாஸ்வோர்ட் மற்றும் அங்கீகாரம் இல்லாத, எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ள பொது வைஃபை நெட்வொர்க்குகளை நிறுவி, அதன் மூலம் உங்கள் மொபைலை ஹேக் செய்வர்.
மின்னஞ்சல், தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மூலம் அதிகமாக மொபைல் ஹேக்கிங் செய்யப்படுகிறது. பெரும்பாலும் மின்னஞ்சலை விட குறுஞ்செய்தி மூலமாகவே ஹேக் செய்கின்றனர். உதாரணமாக ஹேக் செய்யும் மென்பொருளின் லிங்கை குறுஞ்செய்தி மூலம் அனுப்புகின்றனர். அதை நாம் க்ளிக் செய்யும் போது, மொபைல் ஹேக் செய்யப்படுகிறது.
நாம் விழிப்புடன் இருப்பதன் மூலம் இதை தடுக்க முடியும்.
இப்போது உங்கள் மொபைல் ஹேக் செய்யப்படுவதை எப்படி தடுக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
- கடவுச்சொல் நிர்வாகி (Password Manager) போன்ற பாதுகாப்பான ஆப்களை பயன்படுத்தாத வரையில், பாஸ்வேர்ட், வங்கிக் கணக்கு க்ரெடிட் கார்டு விவரங்கள் போன்றவற்றை சேமிக்க வேண்டாம்.
- மற்றவர்கள் யூகிக்க முடியாத வலுவான பாஸ்வேர்டை உருவாக்கி கொள்ளுங்கள்.
- சில முக்கியமான அதாவது உங்கள் வங்கி கணக்கு, Gpay, Paytm போன்ற பணப்பரிவர்த்தனை ஆப்களுக்கும் வலுவான பாஸ்வேர்டை போட்டுக் கொள்ளுங்கள்.
- ப்ளூடூத் (Bluetooth), நீங்கள் பயன்படுத்தும் போது மட்டுமே ஆன் செய்யப்பட வேண்டும். மற்ற நேரங்களில் அதை ஆஃப் செய்து வைக்க வேண்டும்.
- இணையத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது, தேவையில்லாத அதிகமான பாப் - அப்கள் வருவது, மொபைல் பேட்டரி வேகமாக தீர்ந்து போவது போன்றவை இருப்பின் அவற்றை கவனிக்க வேண்டும்.
- மென்பொருள் அப்டேட்கள் (Software Uptates) வெளியானவுடன் உங்கள் மொபைலை அப்டேட் செய்ய வேண்டும்.
- உங்களது மொபைல் டேட்டாக்களை பாதுகாக்க அடிக்கடி பேக் அப் செய்ய வேண்டும்.
- பொது வைஃபை நெட்வொர்க்குகளை பயன்படுத்தும் போது அதிக கவனம் வேண்டும்.
இதையும் படிங்க: Deep fake: மக்களை அச்சுறுத்தும் டீப் பேக் தொழில்நுட்பம்..! போலியாக உருவாக்கப்பட்டதை கண்டறிவது எப்படி?