பிளாஸ்டிக் மாசுபாடு நமது நிலம், நீர்வழிகள் மற்றும் பெருங்கடல்களை அழித்து, பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், சுற்றுச்சூழல் பிரச்னைகள், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு ஒரே வழி கண்ணாடி பாட்டில் உபயோகிப்பதுதான். அதுவும் சமையலறையில் கண்ணாடி பாட்டில்கள் உபயோகிப்பது நமது ஆரோக்கியத்திற்கு வழிவகும்.
மளிகை பொருட்களை கண்ணாடி பாட்டில்களில் போட்டு வைத்தால், அதன் மணம் மாறாமலும், பொருள் கெடாமலும் நீண்ட நாள்கள் வரும். பிற பிளாஸ்டிக் பாட்டில்களில் மளிகை பொருள்கள் அடைத்து உபயோகிக்கும் போது அதன் மணம் மற்றும் சுவை மாறுபடுகிறது.
கண்ணாடி பாட்டில்களின் பயன்கள்:
- 100 விழுக்காடு மறுசுழற்சி: கண்ணாடி பொருள்களை நாம் பல ஆண்டுகள் வைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும். இது இயற்கையான பொருள்களால் ஆனது மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடியது. இவை நிலப்பரப்புகளை பாதுகாக்கிறது. கண்ணாடியின் தூய்மை, தரம், நீடித்து நிலைத்தன்மை ஆகியவை, உணவுப் பொருள்களை சேமித்து வைப்பதற்கும், பேக்கிங் செய்வதற்கும், உபயோகமாக உள்ளது. கண்ணாடி உடைந்தாலும் மறுசுழற்சி செய்யலாம்.
- நீடித்த பாதுகாப்பு: கண்ணாடி பாட்டில்களில் உலர்ந்த பொருள்கள், மசாலா பொருள்கள், பால், ஜாம், ஊறுகாய், உறைய வைக்கும் உணவுப் பொருள்களை போட்டு வைப்பதால், நீண்ட நாள்கள் கெடாமல் இருக்கும். மேலும் சுவை மாறாமல் இருக்கும்.
- மாறாது தரம்: சூடான பொருள்களை பிளாஸ்டிக் கிண்ணத்தில் போட்டு வைத்தால், பிளாஸ்டிக்கின் மணம் உணவுடன் கலந்துவிடும். மேலும், விரைவில் பொருள்களும் கெட்டு விடும். ஆனால் கண்ணாடி பொருளில் சூடான உணவை வைத்தால், அதில் எந்த கிருமியும், கெட்ட மணமும் வராது. எனவே, கண்ணாடியில் சேமித்து வைக்கப்பட்ட உணவு, ஊட்டச்சத்துடன் நீண்ட காலம் பாதுகாப்பாகவும் புதியதாகவும் இருக்கும்.
- அழக்கூட்டும் கண்ணாடி: சமையலறையில் கண்ணாடி பொருள்கள் இருக்கும்போது அது ஒரு தனி உலகம் போல் காட்சியளிக்கிறது. கண்ணாடி பொருள்களில் மளிகை பொருள்கள் கொட்டி வைத்திருப்பது, பார்க்கவே அழகாக இருக்கும். அதனை காணும் போதே நமக்குள் ஒரு புத்துணர்ச்சி வரும்.
- அலங்கார பொருள்கள்: கண்ணாடி பாட்டில்களை ஒரு அலங்கார பொருள்களாகவும் பயன்படுத்த முடியும். அதாவது வீட்டைச் சுற்றி நமக்கு பிடித்த பூக்கள், மூலிகைகள், செடிகள் போன்றவற்றை, கண்ணாடி பாட்டில்களில் வளர்க்கலாம். அவை கண்களை குளிர வைக்கும்.
நாம் எவ்வளவு வருடமானாலும், உடையாத வரைக்கும் கண்ணாடி பாத்திரங்களை தொடர்ந்து உபயோகிக்கலாம். கண்ணாடி பொருள் உடைந்தாலும் அதை கொண்டு மீண்டும் மறுசுழற்சி மூலம் புதிய பொருள்களை தயாரிக்கலாம்.
மறுசுழற்சி கண்ணாடி 40 சதவீதம் குறைவான சக்தி பயன்படுத்தியே செய்துவிட முடியும். கண்ணாடி பாத்திரங்கள் உணவு பொருள்களை சேமித்துவைக்கும் பாட்டில்களாகவும், கிண்ணம், அகலமான கிண்ணங்கள், தட்டுகள், டீ கப்கள், டம்ளர்கள், அடுப்பில் வைத்து சூடு செய்யும் குடுவை, கிண்ணம் என்று பல்வேறு முறைகளில் பயன்படுத்தலாம்.