ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்காக மக்கள் பல்வேறு வழிகளை தேடுகின்றனர். இதுகுறித்து பல்வேறு ஆராய்ச்சிகளும், ஆய்வுகளும் நடத்தப்படுகின்றன. அப்படி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஹார்வர்ட் மருத்துவ பள்ளியின், ஆய்வு ஆசிரியர் டோங் டி வாங் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில் வியத்தகு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஆய்வு ஆசிரியர் டோங் டி வாங் தெரிவிக்கையில், "30 வயதுக்கு மேல் மனித உடலில் பல்வேறு நோய்கள் உண்டாகின்றன. அதன்காரணமாக அவ்வயதுகளில் மக்கள் சத்தான உணவு வகைகளை உட்கொள்ள தொடங்குகின்றனர்.
அப்படி பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளுபவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் தரவுகளை சேகரித்தோம். அதில் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்பட 29 நாடுகளில் 20 லட்சம் பேரின் தரவுகள் சேகரிக்கப்பட்டன.
தினமும் ஐந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டன. அதன் தரவுகள் எங்கள் ஆய்வுகளுக்கு நேர்மறையாக முடிவுகளை அளித்துள்ளது. பொதுவாக பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உடல் உறுப்புகளை சீராக வைத்துகொள்ள உதவுகிறது.
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 400 கிராம் பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணும்போது ஏற்படும் நன்மைகள்
- ஆரோக்கியமான குடலைப் பராமரிக்கவும், மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான கோளாறுகளை தடுக்கவும் உதவுகிறது.
- நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறி வகைகள் குடல் புற்றுநோயின் வீரியத்தைக் குறைக்கிறது.
- இதய நோய், பக்கவாதம் மற்றும் சில வகையான புற்றுநோய்களுக்கு மருந்தாக அமைகிறது.
- பழங்கள் மற்றும் காய்கறிகளில் கொழுப்பு, கலோரிகள் குறைவாக இருக்கும் காரணத்தால் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.
- கண்களின் பார்க்கும் திறனை குறையாமல் வைத்துகொள்ள உதவுகிறது.
- உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டிற்கு அடித்தளமாக அமைகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உடல் எடையை பழங்கள் அதிகரிக்குமா?