ஹைதராபாத்: பெரிய நெல்லி.. அனைவரது வீடுகளிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒரு மரம். இந்த பெரிய நெல்லியின் நன்மை மற்றும் மகத்துவம் பல நூற்றாண்டு கடந்தது. அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்த கதையை வரலாற்றில் கேட்டிருப்பீர்கள். இலக்கியத்தின் மீது அதீத தாகம் கொண்ட அதியமான் மன்னன், அவ்வை நீண்ட நெடிய நாள் உலகத்தில் வாழ்ந்து தமிழ் இலக்கியத்தை பறைசாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அவ்வையின் ஆயுளை கூட்ட பெரிய நெல்லியை அவருக்கு பரிசாக வழங்கி இருப்பார். அவ்வளவு மகத்துவம் உடைய இந்த பெரிய நெல்லி பல நோய்களுக்கு தீர்வாக அமைகிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது குறித்து மருத்துவர் நரேஷ் குப்தா கூறிய தகவல்களை பார்க்கலாம்.
பெரிய நெல்லி ஆயுர்வேத மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவ குணம் கொண்டதாக கருதப்படுகிறது. விட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் உடலிலுள்ள உயிரணுக்களுக்கு வேலி போல் இருந்து வேறு நோய்கள் பாதிக்காமல் இருக்க உதவுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இதில் அதிக ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும் பெரிய நெல்லி; பெரிய நெல்லி நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்க செய்து நோய் தொற்று மற்றும் நோய்களுக்கு எதிராக போராடுகிறது. மேலும், உடலில் வெள்ளை ரத்த அணுக்கள் உருவாவதை ஊக்குவிக்கிறது.
செரிமான சக்தியை அதிகரிக்கும் பெரிய நெல்லி; இது குறித்து பேசியுள்ள மருத்துவர், சுஷ்மா சங்வி.. "பெரிய நெல்லி, குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்தி ஒரு லேசான மலமிளக்கியாக செயல்படுகிறது என தெரிவித்தார். மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை போன்ற குடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். பெரிய நெல்லி, குடலில் செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரிக்கச் செய்து வயிற்றின் ஒட்டுமொத்த நலனுக்கும் பயனளிக்கிறது என குறிப்பிட்டார். மேலும் உணவு உட்கொள்ளும்போது அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடலுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளுக்கு, பெரிய நெல்லி மிகுந்த உதவியாக இருக்கிறது எனவும் அவர் கூறினார்.
தோல் மற்றும் முடி பராமரிப்பில் பெரிய நெல்லி; "பெரிய நெல்லியின் சாறு தோல் மற்றும் முடி பராமரிப்பிற்கான பொருட்களில் அதிகம் சேர்க்கப்படுகிறது. ஹேர் ஆயில், ஃபேஸ் வாஷ் உள்ளிட்ட பல அழகு பராமரிப்பு பொருட்களில் பெரிய நெல்லியின் பங்கு மகத்தானது. இது உடலில் புரத சத்தை தூண்டி உடல் அழகு மற்றும் தோல் சுருக்கங்களில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் பெரிய நெல்லியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், சூரிய கதிர்களால் ஏற்படும் பாதிப்பு மற்றும் காற்று மாசுபாட்டில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. மேலும் இந்த பெரிய நெல்லி முடியின் ஆணி வேரை பாதுகாத்து முடி உதிர்வை குறைத்து முடி வளர ஊக்குவிக்கிறது. மன அழுத்தத்தை குறைக்கிறது. இப்படி உடலில் உள்ள அனைத்து நோய்களுக்கும் தீர்வாக அமையும் பெரிய நெல்லியால் ஆயுள் கூடும் என்று சொல்வது உண்மைதானே எனக்கூறுகிறார்கள் மருத்துவர்கள்.
இதையும் படிங்க: காதில் வினோத சத்தம் கேட்கிறதா? காரணம் இதுதான்..! மருத்துவர்கள் கூறும் விளக்கம்