சென்னை: தற்போது சீதாப்பழ சீசன் தொடங்கி உள்ளதை அடுத்து, சாலையோர கடைகள் முதல் சூப்பர் மார்கெட் வரை சீதாப்பழ விற்பனை களைக்கட்ட துவங்கி உள்ளது. குளிர்காலத்தில் மட்டும் கிடைக்கும் சீதாப்பழத்தில் அநேக மருத்துவ குணங்கள் உள்ளன. இப்பழத்தில் உள்ள அதீத இனிப்பு சுவை காரணமாக பலரும் இப்பழத்தை விரும்புவர். சீசன் பழமான சீதாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.
சீதாப்பழத்தில் உள்ள நன்மைகள்: சீதாப்பழத்தில் உள்ள புலாடாசின் மற்றும் அசிமிசின் என்ற பிளாவனாய்டுகள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் சீதாப்பழத்தில் உள்ள அல்கலாய்டுகள் மற்றும் அசிட்டோஜெனின்கள் சிறுநீரக நோய்களைக் குறைக்கின்றன. இது மட்டுமில்லாமல் மெக்னீசியம் மற்றும் கால்சியம் நிறைந்த சீதாப்பழம் எலும்புகளை வலுவாக்குகிறது. குறிப்பாக மூட்டுவலி உள்ளவர்கள் இந்தப் பழத்தை சாப்பிடுவதன் மூலம் நல்ல தீர்வை பெறலாம்.
மேலும் இப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினைகளை சரி செய்கிறது. இது மட்டுமில்லாமல் சீதாப்பழத்தில் உள்ள நியாசின் கெட்ட கொழுப்பை குறைக்கிறது. இத்தகு நன்மைகள் நிறைந்த சீதாப்பழத்தை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடலாமா என்று அறிந்து கொள்வது அவசியம். இப்பழத்தில் இனிப்புச் சுவை அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பழத்தை சாப்பிடக் கூடாது என்று பலர் கூறுகின்றனர். அது உண்மையான தகவல் தானா என்று தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில் நீரிழிவு?: மாறிவிட்ட உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பெரும்பாலான மக்கள், சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடின்றி என அனைவரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்தியாவில் நீரிழிவு நோயின் பாதிப்பு விகிதம் 2021 இல் 9.6 சதவீதம் அதாவது 7.7 கோடியாக உள்ளது. இந்நிலையில், 2030 ஆம் ஆண்டில் நீரிழிவு நோயின் பாதிப்பு விகிதம் 15 கோடியாக உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
நீரிழிவு நோயாளிகள் சீதாப்பழத்தை சாப்பிடலாமாநீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் என்னென்ன உணவுப்பொருட்களை சாப்பிடலாம், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று அறிந்து கொள்வது அவசியம். இந்நிலையில் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் சீதாப்பழத்தை சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலரது மனத்திலும் உள்ளது. சீதாப்பழத்தில் அதிகளவு உள்ள குளூக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும் என்று கூறப்படுகிறது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 55 அல்லது 55க்கும் குறைவான லோகிளைசெமிக் உணவுகளை சாப்பிட வேண்டும். சீதாப்பழத்தில் கிளைசெமிக் இன்டெக்ஸ் மட்டுமே உள்ளது. ஆகையால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சீதாப்பழத்தை அளவோடு சாப்பிடுவது நல்லது. உங்களுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருக்கும் பட்சத்தில் சீதாப்பழம் சாப்பிடுவது குறித்து மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
இதையும் படிங்க: தினமும் ஒரு கப் ஸ்ட்ராபெர்ரி.. டிமென்ஷியாவைக் கட்டுப்படுத்துமா?... ஆய்வு என்ன கூறுகிறது?..