லண்டனை தலைமையிடமாகக் கொண்ட World Obesity Federation அமைப்பு உலக உடல் பருமன் தினத்தை முன்னிட்டு World Obesity Atlas 2023 அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, சிகிச்சை மற்றும் திட்டங்கள் மூலம் தடுக்கப்படாவிட்டால், இந்தியாவில் குழந்தைப்பருவ உடல் பருமன் 2035ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் 9.1% அதிகரிக்கும்.
இந்தியாவில் 2020ஆம் ஆண்டில் சிறுவர்கள் உடல் பருமன் அதிகரிப்பு 3 சதவிகிதமாக இருந்தது. இது 2035ஆம் ஆண்டில் 12 சதவிகிதமாக அதிகரிக்கும். அதேபோல சிறுமிகளுக்கு 2020ஆம் ஆண்டில் உடல் பருமன் அதிகரிப்பு 2 சதவிகிதமாக இருந்தது. இது 2035ஆம் ஆண்டில் 7 சதவீதமாக உயரும். இந்த சதவிகிதம் பெரியவர்களை பொறுத்தவரை, ஆண்டுக்கு 5.2 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2020ஆம் ஆண்டு பெண்களுக்கு உடல் பருமன் அதிகரிப்பு 7 சதவீதமாக இருந்தது. இது 2035ஆம் ஆண்டில் 13 சதவீதமாக உயரும்.
மறுபுறம், ஆண்களுக்கு 2020ஆம் ஆண்டு 4 சதவீதமாக இருந்த உடல் பருமன் அதிகரிப்பு 2035ஆம் ஆண்டில் 8 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் பயன்பாடு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் வியக்கத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சத்தான உணவு வழங்கல் மற்றும் உணவு சந்தைப்படுத்தல் கட்டுப்பட்டில் வைக்கப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகள் சந்தைப்படுத்தல் எளிதாக நடக்கிறது.
அதன் காரணமாக உடல் எடை மேலாண்மையில் பின்னடைவு ஏற்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல், ஆண்டு வருமானம் குறைவாக உள்ள நாடுகளிலும் உடல் பருமன் அதிகரிப்பு பரவலாகி வருகிறது. சொல்லப்போனால், உலகளவில் 10 நாடுகளில் உடல் பருமன் அதிகரிப்பு கணிக்கப்பட்டுள்ளது. அதில், இந்தியா உட்பட ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் அடங்கி உள்ளன. அதேபோல உலக மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் 2035ஆம் ஆண்டுக்குள் அதிக எடை மற்றும் உடல் பருமன் உடன் வாழ்வார்கள்.
இதில் பெரியவர்களை விட குழந்தைகளின் உடல் பருமன் இருமடங்காக இருக்கும். ஆண் குழந்தைகள் 100 சதவீத அதிகரிப்பைக்கூட எட்டலாம். பெண் குழந்தைகள் 125 சதவீதம் உடல் பருமனை எட்டலாம். அடுத்த 12 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 40 கோடி குழந்தைகள் உடல் பருமனுடன் வாழப் பழகிக்கொள்ளும். இந்த எண்ணிக்கை பெரியவர்களிடையே 150 கோடியாக இருக்கும்.
இதுகுறித்து World Obesity Federation அமைப்பின் தலைவர் மற்றும் பேராசிரியர் லூயிஸ் பார் கூறுகையில், உலகம் முழுவதும் வளர்ந்த மற்றும் வளர்ந்துவரும் நாடுகளில் அரசாங்கங்களும், கொள்கை வகுப்பாளர்களும் உடல் பருமன் அதிகரிப்பில் அதிக கவனம் செலுத்தி திட்டங்களை வகுக்க வேண்டும். பொருளாதார செலவுகளை கடந்து முயற்சிகளை எடுக்க வேண்டும். அடுத்த சில ஆண்டுகளில் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் கோடிக்கணக்கான மக்களை காக்க முடியும். அதேபோல, பெற்றோர்கள் குழந்தைகளிடையே விழிப்புணர்வு உடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோடைக்காலத்தில் வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்தை கடுப்படுத்த 10 டிப்ஸ்