டெல்லி: 2022 ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு குழந்தைக்கும் போதிய சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து வசதி மற்றும் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதே பிரதமர் நரேந்திர மோடியின் குறிக்கோள் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சனிக்கிழமை கூறினார்.
அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் மருத்துவர்கள் சங்கத்தின் (வேல்ஸ்) ஆண்டு மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “75ஆவது சுதந்திர ஆண்டுக்குள் புதிய இந்தியாவில் தேசியவாதமும் மனிதநேயமும் மட்டுமே மேலோங்கும்.
நாம் 2022 ஆம் ஆண்டில் 75ஆவது சுதந்திர ஆண்டுக்குள் நுழையும்போது, ஒவ்வொரு குழந்தைக்கும் போதுமான சுகாதாரம், கல்வி மற்றும் ஊட்டச்சத்து வசதி மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள ஒரு புதிய இந்தியாவை நிச்சயமாக நாட்டு மக்களுக்கு வழங்கியிருப்போம். நாட்டில் தேசியவாதம் மற்றும் மனிதநேயம் மட்டுமே நிலவுகிறது. இது பிரதமர் மோடியின் குறிக்கோள்” என்றார்.
முன்னதாக மருத்துவர்கள் மாநாட்டில், “கோவிட்-19 இன் தாக்கத்தை குறைப்பதில் இந்தியாவின் வெற்றியை அவர் எடுத்துரைத்தார். அப்போது, சுகாதார அமைச்சகத்தின் முன்னெச்சரிக்கை அணுகுமுறை, உன்னிப்பான கண்காணிப்பு மற்றும் தொடர்பு தடமறிதல் ஆகியவை இந்தியாவுக்கு பெரிதும் உதவின” என்றார்.
மேலும், “தொற்றுநோயின் ஆரம்பக் கட்டத்தில் இந்தியா அழிவு, இருளை சந்திக்கும் என்று பல வல்லுநர்கள் முன்னறிவித்தனர். இதற்கு மத்தியில், நமது முன்மாதிரியான நடவடிக்கையின் விளைவாக, உலகிலேயே மிக உயர்ந்த மீட்பு விகிதமும், மிகக் குறைந்த இறப்பு விகிதமும் இந்தியாவில் சாத்தியமாகின. கோவிட்-19 இன் பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது.
இந்தத் தொற்றுநோய்களின் போது நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பு விரைவாக அளவிடப்பட்டது. வைரஸ் பாதித்த உலகின் முதல் நாடுகளில் இந்தியாவும் இருந்தது. தொற்றுநோய்களின் போது 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நாம் மருந்துகள் மற்றும் இதர மருத்துவ உதவிகளை வழங்கினோம்” என்றார்.
மேலும் கோவிட் தடுப்பூசிகள் தயாரிப்பதில் நமது நாட்டின் விஞ்ஞானிகளின் முயற்சிகளை பாராட்டினார். அப்போது, “உலக நாடுகளுக்கு தடுப்பூசியை வழங்குவதில் நமது விஞ்ஞானிகள் ஒரு குறிப்பிட்ட பணியை செய்துள்ளனர். நமது நாட்டில் தடுப்பூசி போடும் பணிகள் விரைவாக நடந்துவருகின்றன. முதல் 15 நாள்களில் 37 லட்சம் பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்றார்.
நாட்டில் கோவிட்-19 தடுப்பூசி சனிக்கிழமை (ஜன.30) இரவு 7 மணி வரை 2 லட்சத்து 6 ஆயிரத்து 130 பயனாளிகளுக்கு போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இரண்டே வாரத்தில் தமிழ்நாடு வருகிறார் நரேந்திர மோடி