பெரும்பாலான மக்கள் இன்று டயட்டில் இருக்கிறேன் என்கிறார்கள். டயட் என்பது குறைவாக சாப்பிடுவதோ அல்லது காலை உணவை தவிர்ப்பதோ அல்ல. சரிவிகித உணவை நாம் எடுத்துக்கொள்வது. சரிவிகித உணவு என்பது அனைத்து சத்துக்களும் நாம் உண்ணும் உணவில் இருக்க வேண்டும்.
உணவில் ஏதேனும் ஒருவகை தானியம், பருப்பு, கீரை, முட்டை மற்றும் பழங்கள் அடங்கி இருக்க வேண்டும். பல ஆராய்ச்சியாளர்கள் இதன் நன்மையையும் ஏற்றுக்கொண்டும், மற்றும் சிலர் நிராகரித்தும் உள்ளனர்.
ஆண்கள், பெண்கள் குறிப்பாக திரைத்துறையில் பணிபுரிபவர்கள், மாடல்கள் போன்ற பலர் தனது உடல் சீராகவும் அழகாகவும் இருக்க பல்வேறு டயட் (diet) பின்பற்றுகிறார்கள். அதில் முக்கியமானது கீட்டோ டயட்
கீட்டோ டயட் என்றால் என்ன?
கீட்டோ டயட் என்பது குறைந்த அளவு கார்போஹைட்ரேட், அதிக கொழுப்பு, புரதம் நிறைந்தது. இது உயிருக்கு ஆபத்தானது என்று சிலர் கூறுகின்றனர். இதைச் சரியாகப் புரிந்து பின்பற்றினால் நன்மை என சிலர் கூறுகின்றனர்.
கீட்டோ உணவு சமீபத்திய காலங்களில் மிகவும் பிரபலமாகிவிட்டது. எல்லா வயதினரிடமும், குறிப்பாக இளம் பெண்களில் பலர் இவ்வகை டயட்டை பின்பற்றுகின்றனர். ஆனால், இதுபோன்ற குறிப்பிட்ட உணவுகள் ஒரு நபருக்குக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து கூடுதலாகத் தெரிந்துகொள்ள ஈடிவி பாரத் சார்பாக, எம்.ஜி.எம் மருத்துவக் கல்லூரி, இந்தூரின் நேரு குழந்தைகள் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஊட்டச்சத்து வல்லுநராகப் பணிபுரியும் மருத்துவர் சங்கீதா மாலுவிடம் பேசியபோது, அவர் பின்வருமாறு விவரிக்கிறார்.
கீட்டோ டயட்டைப் பற்றி அறிந்துகொள்வோம்
எடை இழப்பு என்று வரும்போது, மக்கள் முதலில் நினைப்பது கீட்டோ டயட். ஆனால் இந்த உணவை சரியான முறையில் பின்பற்றுவது மிகவும் கடினம். கீட்டோ உணவு எடையைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து தேவையான அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுவதன் மூலம் அது பலன் தரும். ஆனால் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால், அது ஒரு நபரின் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும்.
கீட்டோ உணவு நம் சிறுநீரகங்களை பாதிக்கும். அதேபோல், அதன் செயல்பாட்டை பெரிதும் பாதிக்கும். இது அதிக புரத உணவு என்பதால், இந்த சிறப்பு உணவில் தண்ணீரை உட்கொள்வது குறைவாக இருந்தால், நம் உடலில் அதிக அளவு யூரிக் அமிலம் ஏற்படும் அபாயமும் கணிசமாக அதிகரிக்கிறது. மேலும், உடலில் சிறுநீரக கற்களின் ஆபத்து அதிகரிக்கிறது.
கீட்டோ உணவில் தினமும் குறைந்தது 25 கிராம் கார்போஹைட்ரேட்டை சாப்பிடுவது அவசியம். ஆனால் பெரும்பாலான மக்கள் இந்தக் குறிப்பிட்ட உணவைப் பின்பற்றும்போது பழங்கள், காய்கறிகளைச் சாப்பிடுவதைக் குறைக்கிறார்கள் அல்லது முற்றிலும் தவிர்க்கிறார்கள். இதன் காரணமாக, உடலில் அத்தியாவசிய வைட்டமின்களின் குறைபாடு உள்ளது. இது தவிர, உடலில் கீட்டோ காய்ச்சலால் அதிக ஆபத்து உள்ளது. இதனால் மக்கள் வயிற்று வலி, தலைச்சுற்றல், வாந்தி போன்ற பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும்.
செரிமானத்தில் ஏற்படும் விளைவு
நமது பாரம்பரிய இந்திய உணவில் உள்ள அனைத்து சத்துக்களும், சைவமாக இருந்தாலும், அசைவமாக இருந்தாலும் சரி, சமமாகவும் தேவைக்கேற்பவும் வழங்கப்படுகின்றன. இருப்பினும், இந்த வகை சிறப்பு உணவில், பல முறை புரதத்தின் அளவு அல்லது வைட்டமின்கள் தேவைப்படுவதை விட அதிகம்.
இருப்பினும், செரிமான அமைப்பு உள்பட நமது உடல் அமைப்புகளின் கட்டமைப்பும் செயல்பாடும் என்னவென்றால், நம் உடலில் ஏதேனும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருந்தால், அவை வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற செயல்முறைகள் மூலம் வெளியேற்றப்படுகின்றன. ஆனால், இந்தச் செயல்முறைகள் காரணமாக, உடலில் உள்ள ஆற்றல் குறைகிறது மற்றும் நமது செரிமான அமைப்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக, செரிமான அமைப்பை உருவாக்கும் உறுப்புகளில் அதிக ஆபத்து ஏற்படுகிறது.
இது சில நேரங்களில் ஆபத்தானது என்பதையும் நிரூபிக்க முடியும்.
உணவில் தேவையான மற்றும் சமமான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருந்தால், அது முழுமையானதாகும். ஒரு வகை ஊட்டச்சத்தை மட்டுமே வழங்கும் எந்தவொரு உணவும் முழுமையான உணவின் வகைக்குள் வராது.
இவ்வாறு அவர் கூறினார்.