பதின் பருவமானது மாணவர்களின் வாழ்வின் திருப்புமுனை பருவம். இது அவர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான நினைவுகளையும், எதிர்கால லட்சியத்தின் திருப்புமுனையாகவும் இருக்கிறது. இந்த வயதில் மாணவர்களை கண்காணித்து அவர்களை வழி நடத்திச் செல்வதில் ஆசிரியர்கள், பெற்றோரின் பங்கு மிகமுக்கியம்.
பதின்பருவம் நேர்மறை எண்ணங்கள் நிறைந்தது. இந்த பருவத்தில் பதின்வயதினர் தங்களைச் சுற்றியுள்ள பல விஷயங்களை ஆராய்ந்து, தங்களையும் மற்றவர்களையும் குறித்து ஒரு சுயாதீனமான கருத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். மேலும், தங்கள் சகதோழர்களைப் பார்த்து அவர்களின் செயல்களைத் திரும்பச் செய்யவும், அவர்களின் ஸ்டைலைப் பின்பற்றவும் விரும்புகின்றனர்.
இதன் இன்னொரு வடிவமே பதின் பருவத்தினர் கதாநாயகர்களை தங்கள் ஆதர்சனமான முன்மாதிரியாக எடுத்துக் கொள்வது. குறிப்பாக, இந்த வயதில் அவர்கள் தங்களுக்கென ஒரு தனித்துவத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர். அதனாலேயே தங்களுக்கு என குழு அமைத்து அதில் பிரபலமடைய விரும்புகிறார்கள். மேலும், இந்த வயதில் தங்களுக்கான அங்கீகாரத்தை உருவாக்குவதில் முனைப்பாக இருக்கின்றனர்.
இது குறித்து விரிவான விளக்கத்திற்காக ஈடிவி பாரத் சார்பில் உளவியலாளர் காஜல் யு. டேவ்வுடன் ஒரு கலந்துரையாடல் நடத்தினோம்.
பெரும்பாலான பதின் பருவத்தினரிடம் எதை மாற்ற நீங்கள் விரும்புகிறீர்கள் எனக் கேட்டால், தங்களது உருவத்தை மாற்றவேண்டும் என்றே பதிலளிப்பார்கள். அவர்களில் சிலர் நல்ல உடல்வாகு வேண்டும் என ஆசைப்படுகின்றனர். சிலர் தட்டையான வயிறு, சிலர் மெலிவான தோற்றத்தை அதே வேளையில் சிலர் கொஞ்சம் பருத்த தேகத்தை விரும்புகின்றனர். இது போன்ற எதிர்பார்ப்புகள் தவறா? என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால், ஒருவர் தன்னுடைய உடலை அதற்காக எந்த அளவுக்கு கட்டாயப்படுத்துகிறார் (force/push) என்பது கவனிக்கப்பட வேண்டியது.
பெரும்பாலான பதின்பருவத்தினர் உடல் அமைப்பினை மாற்ற தங்களது உணவு முறைகளை அவசியமின்றி மாற்றிக் கொள்கின்றனர் அல்லது தீவிர உடல் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். முறையான ஆலோசனையில்லாத இந்த தான்தோன்றித்தனமான செயல்பாடு ஊட்டச்சத்து குறைபாடு அல்லது உடலில் உள்ள திசுக்கள் சிதைதல் போன்ற பாதிப்புக்களை ஏற்படுகிறது. ஒருவருடைய உடலமைப்பு அவருடைய ஜீன் மற்றும் இன்ன பிற காரணங்களாலும் மாறுபடலாம் இந்த மாதிரியான சூழலில் உடலை கட்டாயமாக மாற்றியமைக்க முனைவது நல்ல மாற்றத்தைத் தர வாய்ப்பில்லை.
என்ன செய்யக் கூடாது?
நண்பர்கள், விருப்பமான கதாநாயகர்/நாயகிகள், பிரபலங்கள் என யாருடனும் உங்களை ஒப்பீடு செய்யாதீர்கள்.
ஊட்டச்சத்து நிபுணர்கள், மருத்துவர்கள் ஆலோசனையின்றி கிராஷ் டயட் போன்ற உணவு முறைகளைப் பின்பற்றாதீர்கள்
‘நான் குண்டாக இருக்கிறேன். நான் அழகாக இல்லை’ என உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளும்படியான எதிர்மறை சிந்தனைகளை நிறுத்திக் கொள்ளுங்கள்.
கலோரிகளையும் எடையையும் எண்ணிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள். இதனால் உங்களுக்கு என்ன பயன் விளைகிறது என்பது குறித்து சிந்தியுங்கள். இந்த செயல்பாடு உங்களுக்கு உதவுகிறதா? அல்லது பரிதாபமாக உணரச் செய்கிறதா? என்பதை ஒரு கணம் சிந்தித்து பாருங்கள்.
பெற்றோரே கவனியுங்கள்!
உங்கள் குழந்தைகளிடம், 'நீங்கள் குண்டாக இருந்தால் யாரும் விரும்பமாட்டார்கள்' என்பது போன்ற முட்டாள்தனமான வார்த்தைகளை உதிர்க்காதீர்கள். உடல் பருமனாக இருந்தால் இதைச் செய்யமுடியாது (அ) நீ வானுக்குச் செல்வது கடினம் போன்ற அர்த்தமில்லாத வசனங்களை நடைமுறையில் பயன்படுத்தாதீர்கள்.
என்ன செய்ய வேண்டும்?
அழகை உடல் சார்ந்து மட்டும் யோசிப்பதை நிறுத்துங்கள். அப்போது, நீங்கள் நினைப்பதை விடவும் நீங்கள் அழகு என்பதை உணர்ந்து கொள்வீர்கள். கேலி, கிண்டல்களின் அடிப்படையின் உங்கள் உடலை அணுகாதீர்கள். மெலிந்த/ பருமனான உடல் இரண்டும் கர்ப்பபையில் உருவானவைதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உடல் தோற்றத்தைத் தவிர ஒரு மனிதனை பல விஷயங்கள் அழகாகக் காட்டும்
கண்ணாடியில் தெரியும் உங்கள் பிம்பத்தின் முன் நின்று உங்களிடம் பிடித்த மூன்று விஷயங்களைக் குறித்து கேட்டுக் கொள்ளுங்கள். உங்களைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். இப்போதும் பருமனான உடலமைப்பு மோசமான தோற்றம் என நினைக்கிறீர்களா? அப்படியெனில் ஒரு மாடலோ, கதாநாயகரோ மெலிந்த உடல்வாகால் மட்டும்தான் பிரபலமானார்களா? நிச்சயமாக இல்லை. கடின உழைப்பு அவர்களைப் பிரபலமடையச் செய்தது.
நீங்கள் நீங்களாகவே இருப்பதை ஏற்றுக் கொள்ளும் நண்பர்களுடன் பழகுங்கள். உங்களுக்கான குழுவை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
உலகை எதிர்கொள்ளும்போது உங்கள் மீது நம்பிக்கையுடன் செயல்படுங்கள். ஏனெனில் உங்களிடம் உள்ள திறமையைப் பார்க்கவே உலகம் விரும்பும். உங்கள் தோற்றத்தை அல்ல.