ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளுக்கு மத்தியில், சரியான எடையை பராமரிப்பது பலருக்கும் சவாலானதாக உள்ளது. இன்று நாம் வாழும் வேகமான வாழ்க்கையில், சரியான உணவைப் பராமரிப்பது மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு நேரத்தை ஒதுக்குவது ஒரு பணியாக இருக்கிறது. இதனிடையில், சில நிமிட யோகா செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
யோகா உங்கள் தினசரி வழக்கத்தில் சிறந்த பயிற்சியாகும். இவை தலை முதல் கால் வரை நன்மை பயக்கும். மக்கள் உடற்பயிற்சிகளில் ஈடுபடும்போது, அவர்களில் பெரும்பாலோர் எடையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்கு யோகா உதவியாக இருக்கும். உடல் எடையை குறைக்க பல ஆசனங்கள் உள்ளன. அதில் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய சில...
1. வீரபத்ராசனம்:
- விரிப்பில் நேராக நின்று மூச்சை வெளியேற்றியவாறே கால்களை சுமார் 4 அடி விலக்கி வைக்கவும்.
- மூச்சை உள்ளிழுத்தவாறு கைகளைப் பக்கவாட்டில் உயர்த்தவும்.
- மூச்சை வெளியேற்றியவாறு கைககளை தலைக்கு மேலாக உயர்த்தி இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக வைக்கவும்.
- கைகள் நேராக இருக்க வேண்டும்.
- வலது பாதத்தை வலது புறம் நோக்கி 90 டிகிரி கோணத்தில் வைக்கவும்.
- இடது பாதத்தைச் சற்றே இடது புறமாகத் திருப்பவும்.
- இரண்டு குதிகால்களும் நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.
- மூச்சை வெளியேற்றியவாறு மேல் உடலை வலது புறமாகத் திருப்பவும்.
- மூச்சை உள்ளிழுக்கவும்.
- மூச்சை வெளியேற்றியவாறு வலது முட்டியை மடக்கவும்.
- வலது முட்டி வலது பாதத்திற்கு நேர் மேலாக இருக்க வேண்டும்.
- வலது தொடை நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.
- நேராகப் பார்க்கவும். அல்லது முதுகை சற்று வளைத்து தலையை உயர்த்தி கூப்பிய கைகளைப் பார்க்கலாம்.
- 30 வினாடிகள் இந்நிலையில் இருக்கவும்.
- ஆரம்ப நிலைக்கு வந்து கால் மாற்றிப் பயிலவும்.
2. தனுராசனம்:
- தரைவிரிப்பில் குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் இரு கால்களையும் மடக்கி உயர்த்தி கால்களை நன்கு அகற்றி கொள்ள வேண்டும்.
- அதன்பின் இரு கைகளையும் பின்புறமாக கொண்டு சென்று இருக்கால்களையும் பிடித்துக் கொள்ளவும்.
- சுவாசத்தை மெதுவாக விட்டவாறு தலை, கழுத்து, மார்பு ஆகியவைகளை மேலே தூக்க வேண்டும்.
- வயிற்றுப் பகுதி மட்டும் கம்பளத்தில் அழுந்தியிருக்கும்.
- உடலானது வில் போன்று வளைந்து காணப்படும் இதுவே தனுராசனம் என்ப்படும்.
3. உத்கடாசனா:
- விரிப்பில் நேராக நின்று இரு பாதங்களையும் ஒரு அடி இடைவெளி விட்டு பாதங்களை இணையாத வண்ணம் பக்கவாட்டில் முதலில் வைத்துக்கொள்ள வேண்டும்.
- முழங்கால், இடுப்பு பகுதியை மடக்கி தோள்பட்டைக்கு இணையாகவும் உள்ளங்கை கீழ் நோக்கி இருக்குமாறும் நேராக நீட்டி உடலை அமைக்க வேண்டும்.
- ஒரே நேரத்தில் பாதம், கணுக்கால், முழங்கால், இடுப்பு, தோள் பட்டை என அனைத்து பாகங்களையும் மடக்கி நீட்ட வேண்டும்.
- நாற்காலி போல் அமைப்பில் காணப்படும் இதுவே உத்கடாசனா
4. சேது பந்த ஆசனம்:
- விரிப்பில் படுத்து கால்களை மடக்கி இரண்டு பாதங்களையும் தரையில் வைக்கவும்.
- கணுக்கால் முட்டிக்கு நேர் கீழே இருக்க வேண்டும்.
- கைகள் நீட்டியிருக்க வேண்டும்.
- மூச்சை உள்ளிழுத்தவாறு பாதங்களையும் கைகளையும் தரையோடு அழுத்தி இடுப்பை மேல் நோக்கி உயர்த்தவும்.
- தோள்கள் விரிந்து இருக்க வேண்டும்.
- கைகள் உடலின் அருகே இருக்கலாம், அல்லது உடலின் கீழ் இரண்டு கைவிரல்களும் பிணைந்திருக்கலாம்.
- ஒரு நிமிடம் இந்நிலையில் இருக்கவும்.
- பின் இடுப்பைத் தரையில் வைத்து கால்களை நீட்டி ஆரம்ப நிலைக்கு வரவும்.
5. புஜங்காசனம்:
- விரிப்பில் குப்புறப் படுத்துக் கொள்ள வேண்டும்.
- கால்கள் நன்றாக நீட்டியிருப்பது அவசியமாகும்.
- கைகள் இரண்டையும் மாா்புக்கு நேராகத் தரையில் விரல்களை விாித்து ஊன்றிக் கொள்ள வேண்டும்.
- கைகள் அக்குள் பகுதியைத் தீண்டாமல் முன்னுக்கு எடுத்துச் சென்று அப்படியே தூக்க வேண்டும்.
- மாா்பு முன்னுக்கு வளைந்தும் முகம் நேராக பாா்த்த வண்ணமும் இருக்க வேண்டும்.
- கால்களும் உடலின் இடுப்புக்குக் கீழுள்ள பாகமும் தரையைத் தொட்ட வண்ணம் இருக்க வேண்டும்.
- கைகளை ஊன்றித் தலையை மேலே தூக்கும்போது சுவாசத்தை உள்ளுக்கு இழுத்து, மீண்டும் பழைய நிலைக்க வரும்போது சுவாசத்தை வெளியே விட வேண்டும்.