விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே சங்கரன்கோவில் சாலையில் நேற்று காலையில் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்ட இளைஞர் ஒருவரின் உடல் கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு காவல் நிலைய காவலர்கள் இளைஞரின் உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் கொலைசெய்யப்பட்ட இளைஞர் சின்ன சுரைக்காய்ப்பட்டி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (28) என்பதும் முன்விரோதம் காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதும் தெரியவந்தது. இது குறித்து சதீஷ்குமாரின் அண்ணன் பிச்சை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவருடைய உறவினாரான சீதக்காதி தெருவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் நாராயணசாமி (50) என்பவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
அதில் சதீஷ்குமாரை வீட்டில் வைத்து கொலை செய்ததும், பின் தள்ளுவண்டி மூலம் அவரது உடலை எடுத்துச்சென்று புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையில் வீசி சென்றதையும் அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து நாராயணசாமியை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.