விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாலுச்சாமி (65). இவர் இன்று காலை அந்தப் பகுதியில் உள்ள கண்மாய் மடை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டியன் (30) என்ற இளைஞர், பாலுச்சாமியிடம் முன்விரோதம் காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த அருண்பாண்டியன், தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் பாலுச்சாமியை குத்தி கொலை செய்தார். அப்போது, அலறல் சத்தம் கேட்டு பாலுச்சாமியின் மகன் முனீஸ்வரன் (30) ஓடிவந்து தடுக்க முயன்றுள்ளார். பின்னர், அவரையும் அருண்பாண்டியன் கத்தியால் குத்தியுள்ளார்.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், படுகாயமடைந்த இருவரையும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பாலுச்சாமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், முனீஸ்வரனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்துவருகின்றனர்.
இதற்கிடையே பாலுச்சாமியை கொலை செய்த அருண்பாண்டியன் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர், மருத்துவமனைக்கு சென்ற காவல் துறையினர், பாலுச்சாமியின் உடலை உடற்கூறாய்வு அறைக்கு அனுப்பிவைத்தனர். இந்தக் கொலை தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவில் இருந்தவருக்கு கத்திக்குத்து - இருவர் கைது!