விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வன சரகத்திற்கு உட்பட்ட சேத்தூர் வனப்பகுதியில், இன்று அதிகாலை வனச்சரக அலுவலர் சுப்பிரமணியம் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுந்தரராஜபுரம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக இருவர் படுத்திருந்ததைக் கண்ட வனத்துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் மான், காட்டுப்பன்றி, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மாம்பழம், கொய்யா பழம் உள்ளிட்ட பழங்களுக்கு இடையே நாட்டு வெடிகுண்டுகளை மறைத்து வைத்து வேட்டையாட முற்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த வனத்துறையினர், அவர்கள் பதுக்கி வைத்திருந்த 10க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த, மனோஜ் குமார்(20), சதீஷ்கர்(21) என்பது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அவர்களுடன் வேறு யாருக்கேனும் இதில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கிவைத்த இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடிய இருவர் கைது!