நாடு முழுவதும் கரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் நாட்டு மக்கள் பலர் நான்கு சுவர்களுக்குள்ளேயே முடங்கியுள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம் ரோசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஊரடங்கினைப் பயனுள்ளதாக மாற்ற முற்பட்டுள்ளனர்.
ரோசல்பட்டி கிராமத்தில் முத்தால்நகரில் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஊற்றெடுத்து மக்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவிய கிணறு ஒன்றினை பின்நாளில் அப்பகுதி மக்கள் குப்பைகளைக் கொட்ட பயன்படுத்திவந்துள்ளனர்.
இப்பகுதியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதால் கிணறு மிகவும் வறண்டிருந்ததாகவும், அதனால் இனி கிணற்றைப் பயன்படுத்த இயலாத சூழல் ஏற்பட்டதால் குப்பைக் கொட்டும் பகுதியாக மாற்றியதாகவும் அப்பகுதி மக்கள் விளக்கமளித்தனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என எண்ணிய இளைஞர்களும், மாணவர்களும் தூர்வார தீர்மானித்தனர்.
இதற்காக இவர்கள் அரசிடமிருந்தும், தனியார் அமைப்புகளிடமிருந்தும் எவ்வித நிதியையும் எதிர்பார்க்கவில்லை.
தொடர்ந்து 20 நாள்களில் 25 அடி ஆழம் வரை கிணற்றினை தூர்வாரியுள்ளனர். இதையடுத்து கிணற்றில் தண்ணீர் உள்ளதைக் கண்டு தூர்வாரும் பணியை நிறுத்தியுள்ளனர்.
25 அடிக்கு கீழ் கிணறு பாறைகளால் மூடப்பட்டுள்ளதாகவும், கிணற்றினை ஆழப்படுத்த மாவட்ட நிர்வாகமோ, தொண்டு நிறுவனங்களோ முன்வர வேண்டும் எனவும் இதனால் குடும்பங்கள் பயன்பெறும் எனவும் அப்பகுதி இளைஞர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.
பின்னர், அப்பகுதி மக்கள் தூர்வாரப்பட்ட கிணற்றிற்கு பூஜை செய்து வழிபட்டனர்.
இதையும் படிங்க: ஊரடங்கை ஊருக்காக பயன்படுத்திய தந்தை மகன்