விருதுநகர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, நேற்று (ஏப். 7) தேமுதிக சார்பில் எம்.ஜி.ஆர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். அப்போது பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், "விருதுநகர் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்குத் தமிழ்நாடு அரசு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
சிபிசிஐடி விசாரணை செய்கிறது என்று அரசு மக்களை முட்டாளாக்க நினைக்காமல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை வேண்டும். அப்படி வழங்காவிட்டால் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்குவார்கள்.
ஓட்டுப் போட்ட மக்களுக்குத் தண்டனை: திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய் என்று மக்கள் தற்போது உணர்ந்து கொண்டார்கள். திமுக, ஒட்டு போட்ட மக்களுக்கு வரி உயர்வை வழங்கி வருகிறது. இதனை மறு பரிசீலனை செய்து குறைக்க வேண்டும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் 5 ஆண்டுக் கால ஆட்சியைத் தக்க வைக்க முடியாது. சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்று திமுக சொல்கிறது. இதற்குத் தமிழ்நாடு பாஜக விளக்கமளிக்க வேண்டும்.
திமுகவிற்கு திரானி இருந்தால் துபாய் பயணம் குறித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டும். துபாய் பயனத்தால் எத்தனை நபருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து வெள்ளை அறிக்கையைத் தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு: 4 சிறார்களுக்கு ஜாமீன்