விருதுநகர்: விருதுநகர் அருகே அம்மன்கோவில்பட்டி புதூர் பகுதியில் செல்வகுமார் என்பவருக்குச் சொந்தமான பொம்மி பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது.
நேற்று (ஜன.29) மாலை வழக்கமாகப் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில் மாலை பணிகள் முடிந்த பிறகு மீதம் உள்ள கழிவுப் பட்டாசுகளை தீயிலிட்டு எரிக்கும் பணியில் ஆறுமுகம், தெய்வேந்திரன், குபேந்திரன் ஆகிய 3 பேர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஆறுமுகம் என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தெய்வேந்திரன் மற்றும் குபேந்திரன் ஆகிய இருவரும் 90 விழுக்காடு தீக்காயத்துடன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இருவர் உயிரிழப்பு
இந்நிலையில் குபேந்திரன் இன்று சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து இந்தப் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.
90 விழுக்காடு தீக்காயத்துடன் தெய்வேந்திரன் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த பட்டாசு விபத்து குறித்து ஆமத்தூர் காவல்துறையினர் ஆலை உரிமையாளர் செல்வக்குமார் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில் இன்று மதுரையில் வைத்து கைது செய்தனர்.
இதனிடையே விபத்து ஏற்படும் வகையில் கவனக்குறைவுடன் செயல்பட்டதாக ஆலையின் உரிமத்தைத் தற்காலிகமாக ரத்து செய்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏற்பட்ட 4ஆவது வெடி விபத்து இது என்பதும்; இதுவரை கடந்த ஒருமாதத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
![கைதான உரிமையாளர் செல்வம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14322069_owner.jpeg)
இதையும் படிங்க:உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மூலதன மானிய நிதி - தமிழ்நாடு அரசு