விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் - லதா தம்பதியின் மகளான சக்தி ஷிவானி, விருதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக யோகாசனத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டுவரும் இவர், யோகாசனத்தில் மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
குறிப்பாக, தன் தலையில் தண்ணீர் குவளையில் எரியும் மெழுகுவர்த்தியை வைத்துக்கொண்டு கீழே விழாமலும், மெழுகுவர்த்தி அணையாமலும் தொடர்ந்து 50 யோகாசனம் செய்து உலக சாதனை படைத்து, நோபல் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றார்.
இதையும் படிங்க: யோகாவில் உலக சாதனை படைத்த விருதுநகர் பள்ளி மாணவி!
தற்போது அந்த வரிசையில் அவர் திரிவிக்ரமாசனத்தின் மூலம் மீண்டும் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். அந்த ஆசனத்தின் படி, அவர் ஒற்றைக் காலில் நின்றபடி, ஒரு கையால் ஒரு காலை பிடித்தும், மறு கையால் அம்பை பிடித்தவாறும் தனது வாயினால் 12 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை 43 நொடிகளில் துல்லியமாக மூன்று முறை எய்தி உலக சாதனைப் படைத்தார். இந்த ஆசனத்தில் இதுபோன்ற சாதனைப் படைப்பது இதுவே முதல்முறையாகும்.
இச்சாதனை படைத்ததன் மூலம், நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்த அரியவகை சாதனை படைத்த இவரை பள்ளி ஆசிரியர்களும் பள்ளி தலைமை ஆசிரியரும் பாராட்டினார்கள்.