விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் வசித்துவந்தவர் சங்கிலி ராஜன் (48). இவர் தேமுதிக திருத்தங்கல் நகர முன்னாள் செயலாளராக பொறுப்பில் இருந்திருந்தார். பின்னர் அக்கட்சியின் உறுப்பினராக செயல்பட்டுவந்த அவர் திருத்தங்கலில் இருந்து விருதுநகர் செல்லும் சாலையில் மளிகைக் கடை வைத்து நடத்திவந்துள்ளார்.
இந்நிலையில் திருத்தங்கலிலிருந்து அதிவீரன்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் இவர் உடலில் கத்திக்குத்து காயங்களுடன் படுகொலைசெய்யப்பட்டு கிடந்துள்ளார்.
ஆள்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கொலை சம்பவம் நடந்ததால் யாருக்கும் தெரியாத நிலையில் தோட்டத்து வேலைக்குச் சென்ற நபர்கள் கொலை சம்பவத்தைப் பார்த்து திருத்தங்கல் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்து விருதுநகரில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கொலையான தேமுதிக பிரமுகர் சங்கிலி ராஜனுக்கும் திருத்தங்கலைச் சேர்ந்த ராமதிலகம் என்கிற பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. ராமதிலகம் திருமணம் முடிந்து கணவரைப் பிரிந்து தனது பாட்டி சோலையம்மாள் வீட்டில் வசித்துவருகிறார். அப்பெண் வீட்டிற்கு சங்கிலி ராஜன் அடிக்கடி வந்துபோவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ராமதிலகம் பாட்டி சோலையம்மாள் இறந்துவிட்டார். இதையடுத்து, சோலையம்மாளின் சொத்துகளை சங்கிலி ராஜன் உதவியுடன் ஆவணங்கள் அனைத்தையும் மாற்றி ராமதிலகத்தின் பெயரில் மாற்றியுள்ளனர். இதை அறிந்த சோலையம்மாள் அண்ணன் மகன் பாலமுருகன், அவர் மனைவி லதா வழக்கறிஞர் லட்சுமண மூர்த்தி உதவியை நாடியுள்ளார்.
பின்னர் தங்களுக்கு சொத்து கிடைக்காமல்போக காரணமாக இருந்த சங்கிலி ராஜனை தீர்த்துக்கட்ட லதா அதே பகுதியைச் சேர்ந்த வி.சி. ராஜா என்பவரிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில்தான் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 5) இரவு வழக்கம்போல தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த சங்கிலி ராஜனை பின்தொடர்ந்த வி.சி. ராஜாவும் அவரது கூட்டாளிகளும் கத்தியால் வயிறு, முதுகு கைகளில் குத்திவிட்டு தலைமறைவாகிவிட்டனர் எனத் தெரியவந்தது.
இதையடுத்து இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடிவந்தனர்.
இந்நிலையில் கொலைச் சம்பவத்தில் வி.சி. ராஜா, தாழை மணி, கூல் (எ) ராபின், வினோத் கண்ணா ஆகிய நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
மேலும் வழக்கறிஞர் லட்சுமண மூர்த்தி தலைமறைவாகியுள்ளார், அவரைத் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து பாலமுருகன், லதாவை விசாரணை செய்துவருகின்றனர்.