விருதுநகர்: இளம்பெண் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி மற்றும் பிரவீன் ஆகியோரை சிபிசிஐடி காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், நீதிமன்றம் கொடுத்த 7 நாள் காவல் முடிந்து இன்று (ஏப். 4) ஹரிஹரன் உள்ளிட்ட நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக, உடல்நிலை பிரச்னை காரணமாக ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி ஆகியோருக்கு கடந்த மூன்று நாள்களாக சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (ஏப்.04) காலை ஹரிஹரன் உள்ளிட்ட மூவருக்கும் மருத்துவர் குழு பரிசோதனை செய்தது. இதையடுத்து, ஹரிஹரனுக்கு மட்டும் தலையில் ஸ்கேன் எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.
அதற்காக அவரை காவல் துறையினர், விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருந்தபோது ஹரிஹரனுக்கு விபத்து ஏற்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதும், இதற்காக அவர் சிகிச்சைப் பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.
சிகிச்சை முடிந்து ஹரிகரன் அழைத்து வரப்பட்ட நிலையில் ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து 4 பேரும் சிறையில் அடைக்கப்படுகின்றனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக இவர்கள் 4 பேரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
இதையும் படிங்க: விருதுநகர் பாலியல் வழக்கின் குற்றவாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை