விருதுநகர்: முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பள்ளித் தலைமை ஆசிரியரும், மாணவர்களும் சேர்ந்து ஒரு லட்சத்து 2000 ரூபாய் நிதி அளித்துள்ளனர்.
செவல்பட்டி அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமகுமாரி ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையையும், அவர் தலைமையில் இயங்கும் பள்ளி மாணவர்கள் வழங்கிய 2000 ரூபாயையும் சேர்த்து, மொத்தம் ஒரு லட்சத்து 2000 ரூபாயை, கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் வழங்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கும், இந்தப் பேரிடரை எதிர்கொள்வதற்கும் தமிழ்நாடு அரசு கூடுதலான நிதி ஆதாரங்களைச் செலவிட வேண்டியுள்ளது. எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு பொது மக்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற வகையில் உதவிட வேண்டும்" என்றார்.
தொடர்ந்து, கரோனா நிவாரணப் பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய பள்ளி மாணாக்கர்களையும், அரசுப்பள்ளி தலைமை ஆசிரியையும் மாவட்ட ஆட்சியர் வெகுவாகப் பாராட்டி இனிப்புகள் வழங்கினார்.