விருதுநகர்: ராஜபாளையத்தில் கடந்த 12ஆம் தேதி தீபாவளி அன்று இனிப்பாக உரிமையாளர் சிவகுமார் தனது குடும்பத்துடன் வரும்போது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பந்தமாக தெற்கு காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில், காவல்துறையின் தொடர் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சிவகுமாரின் மனைவி காளீஸ்வரி தனது ஆண் நண்பருடன் இணைந்து கொலை செய்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இனிப்பக உரிமையாளர் சிவக்குமார் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் எதிரே மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ராஜா ஸ்வீட்ஸ் என்ற பெயரில் ஸ்வீட் கடை நடத்தி வந்துள்ளார். மேலும், விஜயகுரு டிரஸ்ட் என்று ஒன்றையும் நிர்வகித்து வந்துள்ளார். சிவக்குமார்க்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில் தனது கடையில் பணியாற்றி வந்த காளீஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், ராஜபாளையத்தில் உள்ள தனது ஸ்வீட் கடையைத் தற்காலிகமாக மூடிவிட்டு சென்னையில் தனது குடும்பத்துடன் சிவக்குமார் வசித்து வந்துள்ளார். தீபாவளிக்காகச் சொந்த ஊருக்குத் திரும்பிய சிவகுமார் தனக்குச் சொந்தமான விவசாய நிலங்களைப் பார்வையிடுவதற்காக தெற்கு வெங்காநல்லூர் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, அவருக்குச் சொந்தமான இடத்தில் நால்வர் அமர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்ததாகவும், அவர்களைத் தனது இடத்தை விட்டுப் போகச் சொல்லி சிவக்குமார் சத்தம் போட்டதாகவும் மீண்டும் அவ்வழியாக வந்த சிவக்குமாரை வழிமறித்து வாகனத்தைத் தள்ளிவிட்டு நால்வரும் தனது கணவரை வெட்டியதாக காளீஸ்வரி தனது வாக்குமூலத்தில் 12ஆம் தேதி தெரிவித்திருந்தார்.
காளீஸ்வரியின் வாக்குமூலத்தைக் கொண்டு தொடர் விசாரணையில் ஈடுபட்ட ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய காவல்துறை விசாரணை வளையத்திற்குள் காளீஸ்வரி கொண்டு வந்தனர். அவரது செல்போன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்ற கின்னஸ் சாதனை படைத்த யோகாசன பயிற்சியாளருக்கும் காளீஸ்வரிக்கும் திருமணத்தைக் கடந்த உறவு இருப்பது தெரிய வந்தது. காளீஸ்வரி தான் தனது கள்ளக்காதலனுக்குத் தகவல் தெரிவித்து அவரது நண்பருடன் இணைந்து சிவக்குமாரை வெட்டி படுகொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து, விசாரணையில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் சிவகுமார் படுகொலைக்குக் கள்ள உறவு தான் காரணமா அல்லது சொத்துக்காக இந்த கொலை நடைபெற்றதா என்ற பல்வேறு கோணங்களில் தொடர் விசாரணையைச் செய்து வருகின்றனர்.
மேலும், இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியாக சிவகுமாரின் மனைவி காளிஸ்வரியை கைது செய்தனர். மேலும், கொலை தொடர்பாகச் சிலம்பம் மாஸ்டர் ஐயப்பன், மருது பாண்டியன் மற்றும் விக்னேஷ் ஆகியோரையும் கைது செய்து விசாரணைக்குப் பின்பு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்காதலுக்கும் இடையூறாக இருந்த கணவரை மனைவியே திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் ராஜபாளையம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தங்கையை காதலித்த இளைஞரை கொலை செய்த அண்ணன்.. திருப்பத்தூரில் நடந்த கொடூரம்!