சிவகாசியில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பட்டாசுத் தொழிலை பாதுகாப்பாக மாற்றவும், அதில் உள்ள குறைபாடுகளை நீக்க மத்திய, மாநில அரசுகள் மாவட்ட நிர்வாகங்களுடன் துணைநிற்க வேண்டும்.
விபத்தில் யார் மீதும் பழிசுமத்தி மாவட்ட நிர்வாகமும் அரசும் ஒதுங்கிக்கொள்ள நினைப்பது சரியாக இருக்காது. 2012ஆம் ஆண்டு முதலிப்பட்டி விபத்துக்கு பின்பு 2021ஆம் ஆண்டும் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்கு காரணமானவர்கள் மீது அலுவலர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அலுவலர்களுக்கு ஆய்வுசெய்வதற்கு போதிய வாகன வசதி இல்லை எனக் கூறப்படுவது உண்மைதான்; இது குறித்து மத்திய அமைச்சரிடம் தெரிவிப்பேன்" எனக் கூறினார்.
அப்போது, பட்டாசு தொழிலுக்குப் பதிலாக மாற்றுத்தொழில் கொண்டுவர வேண்டுமென துரைமுருகன் கேள்விக்குப் பதிலளித்த மாணிக்கம் தாகூர், "இது மிகத் தவறான பார்வை; நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த தொழில், பல லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பில் உள்ளனர். இப்படி ஒரு பார்வையில் எவரேனும் பார்க்க வேண்டாம்" எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், பட்டாசு விபத்தில் தாய், தந்தையை இழந்த மாணவிக்கு ஆண்டுதோறும் மாவட்ட காங்கிரஸ் சார்பில் 25 ஆயிரம் ரூபாய் அதன் கல்விச் செலவை மக்களவை உறுப்பினர் என்ற முறையில் நான் ஏற்றுக்கொள்கிறேன் என மாணிக்கம் தாகூர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: கொளுத்தும் வெயிலில் குழந்தைகளுடன் காத்திருந்த பெண்கள்.. முகம் கூட காட்டாமல் கடந்து சென்ற ஸ்டாலின்!