விருதுநகரில் கரோனா ஊரடங்கு காரணமாக 50 நாள்களுக்கும் மேலாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டிருந்தன. ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதையடுத்து 50 விழுக்காடு பணியாளர்களுடன் வேலையைத் தொடங்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பட்டாசு ஆலைகள் செயல்பட்டுவருகின்றன. இந்நிலையில் சிவகாசி பகுதியில் உள்ள கிருஷ்ணசாமி பட்டாசு ஆலைக்கு வேலைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி, கார்த்திகைபட்டி, மேலத்தொட்டியபட்டி, அப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பணியாட்களை ஏற்றிச்செல்ல பட்டாசு ஆலையின் சார்பாக மினி பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பணியாட்களை ஏற்றிக் கொண்டு கோப்பநாயக்கன்பட்டி விளக்கு பகுதியில் மினி பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் சாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் எட்டு பெண்கள் உள்பட ஒன்பது பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர் - சக்கரத்தில் சிக்கி ஓட்டுநர் உயிரிழப்பு