விருதுநகர் மாவட்டத்தில் 1,080 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. கரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு இருந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொழிலாளர்கள் வேலையை தொடங்கினர்.
சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளத்தில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கிவருகிறது. இந்த ஆலையில் 36 அறைகளில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம் போல் நேற்று (பிப்.13) பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஏற்பட்ட உராய்வினால் வெடி விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் 13 அறைகள் சேதம் அடைந்தன.
இதில் சந்தியா என்று கல்லூரி மாணவி, கற்பகவள்ளி (20) என்ற 7 மாத கர்ப்பிணி உள்ளிட்ட 19 பேர் உயிரிழந்தனர்.
27க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிவகாசி, மதுரை உள்பட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 6 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து வெம்பக்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாசு ஆலை உரிமையாளர் சந்தனமாரி, குத்தகைதாரர்கள் சக்திவேல், சிவக்குமார், பொன்னுப்பாண்டி, ராஜா, வேல்ராஜ் ஆகிய 6 பேர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் இரண்டு லட்சமும், மாநில அரசு சார்பில் மூன்று லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிவாரணம் போதாது எனவும் கூடுதலாக வழங்க வேண்டும் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
பட்டாசு ஆலைகளில் மாவட்ட நிர்வாகம் சரியாக ஆய்வு செய்யாததுதான் விபத்திற்கு காரணம் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
உயிரிழந்த பட்டாசு தொழிலாளர்களின் உடற்கூராய்வு சிவகாசி அரசு மருத்துவனையில் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து - பலி எண்ணிக்கை 19ஆக உயர்வு