தீபாவளி நெருங்கிவரும் நிலையில் விருதுநகர், அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் பட்டாசு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விருதுநகர் அருகே குந்தலபட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று (செப்.28) காலை பட்டாசு தயாரிக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது மருந்து கலக்கும் அறையில் செங்குன்றாபுரத்தை சேர்ந்த கிருஷ்ண குமார்(55) என்பவர் மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கிருஷ்ண குமார் படுகாயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் மருந்து கலக்கும் அறை முற்றிலும் வெடித்து சிதறியது.
விருதுநகர் தீயணைப்பு துறையினர் தீயையை அணைத்து வேறு அறைகளுக்கு பரவ விடாமல் தடுத்தனர். இந்த விபத்து குறித்து ஆமத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான பட்டாசு ஆலை உரிமையாளர் தங்கராஜை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:
பெண்களை ஏமாற்றிய வழக்கு: கன்னியாகுமரி காசியின் நண்பரை பிடிக்க சிபிசிஐடி தீவிரம்!