விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் தலைமையில் அனைத்து மத பிரதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள், துணை காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், மத பிரநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் வழிபாடுகள் அனைத்தும் அவரவர் வீட்டிலேயே செய்துகொள்ள ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கண்ணன், “விருதுநகர் மாவட்டத்தில் வரும் 14ஆம் தேதி வரை நடைபெறும் மதம் சார்ந்த வழிபாடுகளில் நான்கு நபர்கள் மட்டும் கலந்துகொள்ள வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 25ஆம் தேதி முதல் தற்போது வரை 144 தடையை மீறியதாக 1,214 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 672 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 1,877 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். பலர் விளையாட்டாகவும் வீர சாகசம் செய்வதாக எண்ணி வெளியில் சுற்றி வருகிறார்கள். அவர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்கப்படும்” என்றார்.
மேலும் பேசிய அவர், “விருதுநகர் மாவட்ட அரசு தலைமை மருந்துவமனையில் 17 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்கள். அதில் ஒன்பது நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் மூன்றாம் கட்ட சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருந்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்கள். அவர்கள் விரைவில் முழு குணம் அடைவார்கள். கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்த 71 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் அனைவரும் சுகாதாரத் துறையினர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் 3ஆம் கட்டத்தை அடையும் பட்சத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பள்ளி கல்லூரிகளின் விடுதிகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் ஒன்பது பே௫க்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆனது. இதைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள், அவர்களோடு பழக்கம் வைத்துக்கொண்டவர்கள் ஆகியோரைக் கண்டறியும் பணியும் நடைபெற்று வ௫வதோடு சம்பந்தப்பட்ட பகுதிகளும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விளக்கேற்றுவதால் அறிவியல் ரீதியாக நன்மை உண்டா? மோடிக்கு குமாரசாமி கேள்வி!