விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், திருச்சுழி பூமிநாதன் கோயில், சிவகாசி மெயின்ரோடு, வள்ளியூர், திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலணி ஆகிய இடங்களில் அமைந்துள்ள நியாயவிலை கடைகளில் கரோனா சிறப்பு நிவாரண நிதி இரண்டாவது தவணை ரூ.2 ஆயிரம், 14 வகையான மளிகைப் பொருள்களை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் கண்ணன், விருதுநகர் சட்டப்பேவை உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினர் அசோகன் ஆகியோர்கள் இருந்தனர்.
அதேபோன்று அருப்புக்கோட்டை வட்டம், பெரியவள்ளிக்குளம், பாலவநத்தம், அருப்புக்கோட்டை வடம்போக்கி தெரு, அருப்புக்கோட்டை முஸ்லீம் தெரு, அஜீஸ் நகர், பந்தல்குடி மெயின்பஜார், பந்தல்குடி பஞ்சாயத்து அலுவலகக் கட்டடம், மற்றும் சாத்தூர் நடராஜ் தியேட்டர் அருகில் ஆகிய இடங்களில் அமைந்துள்ள நியாயவிலை கடைகளில் கரோனா சிறப்பு நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.
பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, தனி நபர் இடைவெளியைக் கடைபிடித்து நியாயவிலைக் கடைக்களுக்குச் சென்று நிவாரணத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 5,83,741 அரிசி குடும்ப அட்டைத்தாரர் குடும்பங்களுக்கு ரூ.116.75 கோடி மதிப்பில் கரோனா சிறப்பு நிவாரண நிதி, 14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமமங்களை குறைக்கும் வகையில் பொது விநியோகத் திட்ட அரிசி பெறும், மின்னணு குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம், 14 மளிகைப்பொருள்கள் அடங்கிய நிவாரணத் தொகை இரண்டாவது தவணையாக இன்று முதல் அந்தந்த நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டுவருகிறது.