விருதுநகர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பொதுமக்கள் தாராளமாக கரோனா நிவாரண நிதி வழங்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று பல்வேறு தரப்பினர் நிதி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், நிவாரண நிதி வழங்குவதற்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ராஜபாளையத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை கவிதா தனது மகனுடன் நேற்று (ஜூலை 21) சென்றிருந்தார். அங்கு ஆட்சியர் மேகநாத ரெட்டியை சந்தித்த அவர், கரோனா நிவாரண நிதிக்காக தனது மூன்றரை சவரன் தங்க நகையை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
தங்க நகை கொடுத்த பெண்
இதனை வாங்க சற்று தயங்கிய ஆட்சியர், ‘தங்க நகையை எதற்காக நிவாரணமாக வழங்குகிறீர்கள்’ என கவிதாவிடம் கேட்டுள்ளார். அப்போது, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது கணவர் விபத்தில் இறந்த விட்டதால், தன் ஒரே மகனுடன் வாழ்ந்து வருவதாகவும், பொதுமக்கள் நலனுக்காக நகையை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, நகையை கவிதாவிடம் திருப்பி வழங்கியதோடு, ஆதரவில்லாமல் மகனுடன் வாழ்ந்துவரும் தாங்கள் நகையை வழங்க முன்வந்தது பாராட்டத்தக்கது. அதே நேரத்தில் தங்களுடைய மகனின் எதிர்காலத்திற்காக நகையை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் எனக் கூறி நகையை திருப்பி கொடுத்துள்ளார்.
நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஆட்சியர்
மேலும், திருக்குறள் புத்தகம் ஒன்றையும் சிறுவனுக்குப் பரிசாக ஆட்சியர் வழங்கினார். தான் சிரமப்பட்டாலும் பொதுமக்கள் நலனுக்காக தனது நகையை வழங்க முன் வந்த கவிதாவிற்கு அரசு வேலைக்குப் பரிந்துரை செய்வதாகவும் சிறுவனின் கல்வி முடியும் வரை அனைத்து செலவையும் அரசே ஏற்கும் வகையில் ஏற்பாடு செய்தாகவும் ஆட்சியர் உறுதியளித்தார்.
இதனைக் கேட்டு நெகிழ்சியடைந்த அப்பெண், ஆட்சியருக்கு நன்றி தெரிவித்து அங்கிருந்து சென்றனர். தான் ஆதரவில்லாமல் இருந்தாலும் பொதுமக்களுக்கு உதவ எண்ணிய பெண்ணிற்கு அரசு வேலைக்குப் பரிந்துரை செய்வதாக கூறிய மாவட்ட ஆட்சியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மீனவர்களுக்கு மானியத்தில் கட்டுமரம்: நிதி வழங்கிய முதலமைச்சர்