ஏப்ரல் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் பரப்புரையிலும், வாக்கு சேகரிப்பதிலும் தீவிரம் காட்டிவருகின்றனர். இந்நிலையில், அதிமுக கூட்டணி தேமுதிக கட்சியின் விருதுநகர் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் அழகர்சாமி பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அவர் நமக்கு பிரத்யேக பேட்டியளித்தார். நமது செய்தியாளரின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.
தொகுதியில் முக்கியப் பிரச்னை என்று எதை நினைக்கிறீர்கள்?
- மக்கள் ரயில் போக்குவரத்தில் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருவதால் விருதுநகரிலிருந்து தனிப்பட்ட முறையில் ரயில் வசதி சென்னைக்கு ஏற்படுத்தி தருவேன்.
- அருப்புக்கோட்டை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் போன்ற பகுதிகளில் விவசாயம் செய்யப்படும் பூக்களை பதப்படுத்தி வாசனை திரவியம் தயாரிக்க தொழிற்சாலை ஏற்படுத்தி தருவேன்.
- தீப்பெட்டி தொழிற்சாலை, பட்டாசு தொழிற்சாலைகள் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன. எனவே,தீப்பெட்டி தொழிற்சாலை, பட்டாசு தொழிற்சாலைகள் பயன்பெறும் வகையில் ஜிஎஸ்டியை குறைக்க வாய்ப்புகளை ஏற்படுத்துவேன்.
- பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்பவர்களின் குழந்தைகள் ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை கல்வி பயில மானிய வகையில் உதவி ஏற்பாடு செய்யப்படும்.
காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் இத்தொகுதியில் நன்கு அறிமுகமானவர். அப்படியிருக்கையில் வாக்காளர்களை உங்கள் பக்கம் ஈர்க்க எந்த மாதிரியான யுக்திகளை பயன்படுத்துவீர்கள்?
- விருதுநகர் மக்களவைத் தொகுதி எனக்கு ஒன்றும் புதிய பகுதியல்ல. என் ரத்தத்தில் உணர்வுப்பூர்வமாக ஊறிய தொகுதி. காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தேர்தல் நேரங்களில் வருபவர். 2009-14 வரை மக்களவை உறுப்பினராக இருந்தபோது இந்தத் தொகுதிக்கு என்னென்ன திட்டங்கள் செய்துள்ளார். மீண்டும் அவர் வேட்பாளராக போட்டியிட்டபோது அவர் வாங்கிய வாக்குகள் எண்ணிக்கை 38 ஆயிரம்தான்!
உங்கள் கட்சித் தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக தேர்தல் பரப்புரையில் கலந்துகொள்ள முடியவில்லை. இதனால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும். இது உங்கள் கூட்டணி கட்சிக்கு பலமா இருக்குமா? பாதமாக இருக்குமா?
- எங்கள் தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்று சிகிச்சை பெற்ற பின்பு, இப்போது நலமாக உள்ளார். விஜயகாந்த் பரப்புரைக்கு வருவாரா? மாட்டாரா? என்பதை தலைமைக் கழகம் முடிவு செய்யும் என பதிலளித்தார்.