விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில், அருப்புக்கோட்டை பிரதான சாலையில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி உள்ளது. வங்கியின் வெளியே உள்ள ஏடிஎம் மையத்தின் காவலாளி முருகேசன் என்பவர் வழக்கம்போல், நேற்று காலை 6 மணிக்கு பணிக்கு வந்தார்.
அப்போது வங்கியின் உள்ளே இருந்து கரும்புகை வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக வங்கி மேலாளர் ராஜுவுக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து, விரைந்து வந்த வங்கி மேலாளர் வங்கியைத் திறந்து பார்த்தபோது, உள்ளே இருந்த 2 கணினி, 4 குளிர்சாதனப்பெட்டி, எல்இடி டிவி உள்ளிட்ட அனைத்து மின் சாதனப்பொருள்களும் எரிந்து கருகிய நிலையில் இருந்துள்ளன.
மேலும், வங்கியில் உள்ள மின் இணைப்புகள், கேசியர் அறை என அனைத்தும் எரிந்து கரும்புகை சூழ்ந்து காணப்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து வங்கி மேலாளர் ராஜு அளித்த புகாரின் அடிப்படையில், பந்தல்குடி காவல் துறையினர் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
தகவலறிந்தவுடன் வந்த, வங்கி ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.