விருதுநகர்: சாத்தூர் அருகே காயல்பட்டி பகுதியில் கனஞ்சாம்பட்டி கிராமத்தில் பேபி பட்டாசு ஆலையில் ஜனவரி 19ஆம் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஏழு பேர் சாத்தூர் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட மாரிமுத்து, கருப்பசாமி மற்றும் ஜெயராஜ் ஆகிய மூவரில் மாரிமுத்து மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரும் இன்று (ஜனவரி 21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனை அடுத்து இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 4 ஆக அதிகரித்தது. இன்று உயிரிழந்த கருப்பசாமி ஏற்கனவே வெடி விபத்தன்று உயிரிழந்த சங்கர் என்பவரின் மகனாவார்.
ஒரே குடும்பத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று கடந்த 14ஆம் தேதி ஏழாயிரம்பண்ணை அருகே ஏவிஎம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று வட மாநில இளைஞர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தனர்.
அதில் வடமாநில இளைஞர் சந்தீப் மற்றும் வினோத் ஆகிய இருவர் இன்று சிகிச்சை பலனின்றி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதனையடுத்து சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தி நான்கு பேர் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டாசு ஆலை உரிமையாளர்கள் பட்டாசு ஆலைகளை உள் குத்தகைக்கு விட்டால் ஆலை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதுடன் ஒப்பந்ததாரர்கள் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கோழி பண்ணைக்குள் நுழைந்து கோழியை தூக்கி சென்ற சிறுத்தை