விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள இராமலிங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் கிணற்றின் அருகே குளிக்கும்போது தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் அவரை காப்பாற்றுவதற்காக முத்துக்குளிக்கும் நபரான மஸ்தான் பாண்டியன் என்பவரை நாடியுள்ளனர்.
முருகனை காப்பாற்ற மஸ்தான் பாண்டியன் கிணற்றில் குதித்தபோது துரதிர்ஷ்டவசமாக அவரும் மூழ்கியுள்ளார். இது குறித்து தகவலறிந்த ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையிலான காவலர்கள், தீயணைப்புப் படை வீரர்கள் கிணற்றில் மூழ்கிய இரண்டு நபர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மஸ்தான் பாண்டியன் உடல் மட்டும் கிடைத்தது. இதையறிந்த அவரின் உறவினர்கள், கிணற்றில் மூழ்கிய நபரை மீட்பது குறித்து எந்த ஒரு தகவலும் அவரது குடும்பத்தினருக்கும், காவல்துறைக்கும் தெரிவிக்காமல் இந்த செயலில் ஈடுபட்டதால்தான் மஸ்தான் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு நீதி வேண்டுமென உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், காவல் துறையினரிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் அப்பகுதியில் கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்ட நிலையில், சமரச பேச்சுவார்த்தையடுத்து உடலை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்ப்பி வைத்தனர்.
நீரில் முழ்கிய முருகன் என்பவரை தீயணைப்புத் துறையினர் பலமணி நேரமாக தேடி, இரவு 9 மணிக்கு மேல் அவர் உடலை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ரவுடியின் கூட்டாளி குண்டர் சட்டத்தில் கைது