விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கெனவே 2,074 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் இன்று(ஜூலை 13) இரண்டு காவலர் மற்றும் அஞ்சல் வங்கி மேலாளர் உட்பட மேலும் 25 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.
இதன் காரணமாக மாவட்டத்தில் இதுவரை 2,099 பேருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 983 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், மீதமுள்ள 1,099 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்றப் பகுதியில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்தொற்றின் காரணமாக இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதால், மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விருதுநகர் தபால் அலுவலகத்தில் இயங்கி வரும் அஞ்சல் வங்கி சேவையின் மேலாளருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு பணிபுரிந்து வரும் ஊழியர்கள், அலுவலர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஒரு வார காலத்திற்குள் தபால் நிலையத்திற்கு வந்து சென்ற பொதுமக்களை கரோனா பரிசோதனை மேற்கொள்ள தபால் அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.